/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வண்ண மீன்களுடன் நீந்தும் கடல் கன்னிகள்
/
வண்ண மீன்களுடன் நீந்தும் கடல் கன்னிகள்
ADDED : செப் 15, 2024 01:42 AM

வண்ண மீன்கள் நீந்தும் கண்ணாடி தொட்டிக்குள் லைவ்வாக நான்கு கடல் கன்னிகள் நீந்தும் காட்சி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
கோவை வ.உ.சி.,பூங்கா மைதானத்தில் முதல் முறையாக பிரமாண்டமான வண்ண மீன்கள் கண்காட்சி நடக்கிறது. கடலுக்கு அடியில் கண்ணாடியால் பெரிய குகை அமைக்கப்பட்டது போல், பிரமாண்டமான கண்ணாடி கூண்டுகளை இணைத்து, அதில் லட்சக்கணக்கான வண்ண மீன்களை நீந்த விட்டுள்ளனர்.
சில்லென்று குளிரும் அந்த கண்ணாடி குகைக்குள் பார்வையாளர்கள் உள்ளே செல்லும் போது, வண்ண மீன்கள் நம்மை சுற்றி நீந்தி பரவசமூட்டுகின்றன. இந்த கண்காட்சியில் 'ஹைலைட்' என்னவென்றால் கடல் கன்னிகள்தான்.
ஆங்கில சினிமாக்களில் நாம் பார்த்து ரசித்த கடல் கன்னிகளை இங்கு லைவ்வாக பார்த்து ரசிக்கலாம்.
மிகப்பெரிய கண்ணாடி தொட்டிக்குள் மீன்களோடு மீன்களாக நான்கு கடல் கன்னிகள் லைவ்வாக நீந்துவது 'வாவ்' சொல்ல வைக்கிறது. கடல் கன்னிகள் சுழன்று, சுழன்று நீந்தி 'டைவ்' அடித்து அசத்துகின்றனர். குழந்தைகளுக்கு அருகில் வந்து 'பிளைங் கிஸ்' கொடுத்து குதுாகலப்படுத்துகின்றனர்.
கடல் கன்னிகளின் அழகை பார்த்து இளைஞர் மெர்சலாகின்றனர். இது தவிர வழக்கமான பொருட்காட்சிகளில் இருக்கும் ஜெயிண்ட் வீல் ராட்டினங்கள் மற்றும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரும் எல்லா பொழுது போக்கு அம்சங்களும், இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
கண்காட்சி நிர்வாக இயக்குனர் சிட்டி பாபு கூறுகையில், ''மீன் கண்காட்சியை இந்தியாவில் பல நகரங்களில் நடத்தி இருக்கிறோம். கோவையில் இதுதான் முதல் முறையாகும். இதில் மூன்று லட்சம் அரியவகை வண்ண மீன்களை இந்த கண்காட்சியில் பார்த்து ரசிக்கலாம். கடல் கன்னிகள் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள். இந்த கண்காட்சி தீபாவளி பண்டிகை வரை இருக்கும்'' என்றார்.நுழைவு கட்டணம் 100 ரூபாய்.ஒரு விசிட் அடித்து பாருங்க, நல்ல பொழுது போக்காக இருக்கும்.