/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூறாவளி காற்றுக்கு வாழை சேதம் அமைச்சர் ஆய்வு
/
சூறாவளி காற்றுக்கு வாழை சேதம் அமைச்சர் ஆய்வு
ADDED : மே 16, 2024 06:25 AM

பொள்ளாச்சி, : ஆனைமலை பகுதியில், சூறாவளி காற்றுக்கு சேதமடைந்த வாழை மரங்களை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் முத்துசாமி நேற்று பார்வையிட்டார்.
ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில், கடந்த 9ம் தேதி இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. 94.2 மி.மீ., மழை பதிவானது. இதில், வேட்டைக்காரன்புதுார், சேத்துமடை, தாத்தூர், ஒடையகுளம், காளியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்தன.
அறுவடை நிலையில் இருந்த வாழைமரங்கள் சேதமடைந்ததால், விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, சேதமடைந்த வாழை மரங்களை நேற்று பார்வையிட்டார்.
நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது: வாழை மரங்கள் சேதம் குறித்து பார்வையிட்டோம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், நேரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாது. இருப்பினும், பொதுமக்கள் சார்பாக, உரிய நடவடிக்கைக்கு கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனைமலையில் ஆற்றில் உள்ள ஆகாயத் தாமரை செடிகளை, நமக்கு நாமே திட்டத்தில் அகற்றுவதற்கு அதிகாரிகள் தடை விதித்திருந்தனர். வண்டல் மண்ணையும் அனுமதியின்றி எடுத்து விடக்கூடும் என்பதால், அதிகாரிகள் தடுத்தனர். இதுதொடர்பாகவும் கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை நிறைவடைந்ததும், ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, நமக்கு நாமே திட்டத்தில் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அமைச்சர் கூறினார்.
ஆனைமலை தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் கோபிநாத், பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி, அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.