/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் பொழியப்போகிறது இனி தினம் பணமழை!தேர்தல் ஆணையத்துக்கு சவால்!
/
கோவையில் பொழியப்போகிறது இனி தினம் பணமழை!தேர்தல் ஆணையத்துக்கு சவால்!
கோவையில் பொழியப்போகிறது இனி தினம் பணமழை!தேர்தல் ஆணையத்துக்கு சவால்!
கோவையில் பொழியப்போகிறது இனி தினம் பணமழை!தேர்தல் ஆணையத்துக்கு சவால்!
ADDED : மார் 23, 2024 02:49 AM

-நமது நிருபர்-
கோவை தொகுதியில் வெற்றி பெறுவது, முக்கியமான மூன்று கட்சிகளுக்கும் கவுரவப் பிரச்னை என்பதால், அடுத்த ஒரு மாதத்துக்கு பணம் ஆறாகப் பாயுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. பணமழையை தடுத்து, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், மிக பெரிய சவாலும் தேர்தல் ஆணையத்தின் முன் நிற்கிறது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதன் காரணமாக, மாநில அளவில் மட்டுமின்றி, தேசிய அளவில் திரும்பிப் பார்க்கிற ஒரு தொகுதியாக கோவை மாறியுள்ளது.
சவால் மிக்க தேர்தல்
தமிழகத்தில் எல்லாத் தொகுதிகளிலுமே, மும்முனைப் போட்டியே நிலவினாலும், கோவையில் இந்தப் போட்டி, இன்னும் மிகக் கடுமையாகவுள்ளது.
இந்தத் தொகுதியின் வெற்றி, மூன்று கட்சிகளுக்குமே கவுரவப் பிரச்னை என்பதே இதற்குக் காரணம். முக்கியமாக, ஆளும்கட்சியான தி.மு.க.,வுக்கு கோவை தொகுதி, மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளையும் இழந்த தி.மு.க., இந்தத் தேர்தலில் எப்படியாவது இந்தத் தொகுதியைக் கைப்பற்ற வேண்டுமென்று திட்டமிட்டிருந்தது.
இப்போது அண்ணாமலை நிற்பதால், கண்டிப்பாக அவரைத் தோற்கடித்தே தீர வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கியுள்ளது.
பணம் விளையாடும்
கோவையில் தி.மு.க., தன் பலத்தை இழந்து பல ஆண்டுகளாகி விட்டாலும், 2019 தேர்தலில் தி.மு.க., கூட்டணி பலத்தில்தான், மா.கம்யூ., வேட்பாளர் நடராஜன் வெற்றி பெற்றார். இப்போது தி.மு.க.,வே நேரடியாக நிற்பது, கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது.
கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, வீடு வீடாக கொலுசு, ஹாட் பாக்ஸ் விநியோகிக்கப்பட்டது; அதற்கேற்ப அமோக வெற்றியையும் அறுவடை செய்தது. அதேபோல, இப்போதும் பூத் கமிட்டிகளில் துவங்கி, வாக்காளர் வரை பணம் அள்ளி இறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோட்டையை காப்பாற்றணும்
அதேபோல, கோவை அ.தி.மு.க.,வின் அசைக்க முடியாத கோட்டை என்பதைத் தக்க வைப்பதற்கும், வேலுமணி தன் அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்வதற்கும், அ.தி.மு.க., வேட்பாளரை வெற்றி பெற வைப்பது அவசியமாகவுள்ளது.
குறைந்தபட்சம், இரண்டாவது இடத்தையாவது பிடித்தாக வேண்டும்; அதற்காக அக்கட்சியும் 'தாராளமாக' செலவழிக்க வாய்ப்பு அதிகமுள்ளது.
பணத்துடன் மோதும் பா.ஜ.,
பா.ஜ., கட்சியைப் பொறுத்தவரை, மாநிலத்தலைவர் போட்டியிடுவதால், வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று, அக்கட்சியின் தேசியத்தலைமை உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதற்காகவே, இந்தத் தொகுதிக்குட்பட்ட பல்லடம் மற்றும் கோவைக்கு பிரதமர் மோடி, ஒரு மாதத்துக்குள் இரு முறை வந்து சென்றுள்ளார். மீண்டும் ஒரு முறை, அவர் கோவை வரவும் வாய்ப்புள்ளது.
அதனால் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காவிட்டாலும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும், பிரசாரத்துக்கும், தாராளமாக பணம் புழங்க வாய்ப்புள்ளதாக, அக்கட்சியினர் உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.
இந்த வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பதற்கு, கோவையில் பணபலம் படைத்தவர்கள் பெரும் தொகையைச் செலவழிக்கவும் தயாராகவுள்ளனர்.
ஆக மொத்தத்தில், அடுத்த ஒரு மாதத்துக்கு கோவையில் பணம் ஆறாகப் பாயும் அல்லது மழையாகக் கொட்டும் என்று, பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் எதிர்பார்க்கின்றனர். அதே நேரத்தில் இதை முறியடிப்பதற்கு, தேர்தல் கமிஷனும் ஆயத்தமாகவுள்ளது. இதற்காகவே, பறக்கும் படை, சோதனை அதிகாரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
இதையும் தாண்டி, பணம் பாய்ந்தால் அது கோவை தொகுதிக்கு, தனியாகத் தேர்தல் நடத்தும் சூழ்நிலையை, உருவாக்குமென்பது நிச்சயம்!

