ADDED : ஜூலை 02, 2026 04:31 PM
வால்பாறை: வால்பாறையில், பருவமழை பெய்வது, தேயிலை செடிகளில் கவாத்து பணிக்கு கைகொடுத்துள்ளது.
வால்பாறையில் கடந்த மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்கிறது. இதனையடுத்து, தேயிலைக்கு மீண்டும் புத்துணர்வு அளிக்கும் வகையில் பல்வேறு எஸ்டேட்களில்,செடிகளுக்கு காவாத்து பணி நடக்கிறது.
தோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறையில் இந்த ஆண்டு முன் கூட்டியே தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால், தேயிலை செடிகளுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைத்துள்ளது. வெயிலும், மழையும் கலந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், தேயிலை செடிகள் துளிர்விட்டு உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சில எஸ்டேட்களில் தேயிலை செடிகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, இயந்திரம் வாயிலாக கவாத்து பணி நடக்கிறது. இந்த பணி நிறைவடைந்த நிலையில், 90 நாட்களுக்கு பின் தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விட துவங்கும்.
இவ்வாறு, கூறினர்.
