/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலைக்க வைத்த... மலைக்கிராம பழங்குடியினர்!
/
மலைக்க வைத்த... மலைக்கிராம பழங்குடியினர்!
ADDED : ஏப் 20, 2024 12:50 AM

கோவை;கோவை லோக்சபா தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில், ஏராளமான மலைக் கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களில் வாழும் பழங்குடியின மக்கள், தங்களுடைய எல்லாத் தேவைகளுக்கும் சமவெளியை நோக்கியே வருகின்றனர். காப்புக்காட்டுப்பகுதிக்குள், கரடு முரடான பாதைகளைக் கொண்ட அந்த கிராமங்களிலும், ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
கோவை வனக்கோட்டம், ஆனைகட்டி மலைப்பகுதியிலுள்ள துாமனுார் கிராமத்துக்கு, வாகனங்களே செல்ல முடியாத அளவுக்கு, பாதை படுமோசமாகவுள்ளது. அங்கும் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஓட்டுச்சாவடிக்கு பொருட்களைக் கொண்டு செல்லும் போது, யானைகள் வழி மறித்ததால், ஓட்டுப்பதிவு அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். யானைகளை வனத்துறையினர் துரத்தியுள்ளனர்.
அங்கும் நேற்று அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது; அதேபோல, கண்டிவழி, கொண்டனுார் மற்றும் பனப்பள்ளி பழங்குடியின கிராமங்களுக்காக, கொண்டனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.
மொத்தம் 766 வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில், காலை 10:30 மணிக்கே 250 ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன.
அதேபோல, ஆனைகட்டி பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு ஓட்டுச்சாவடிகளிலும், காலை 11:00 மணிக்குள், 27 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர்.
பழங்குடியினர் உள்ளிட்ட பல்வேறு மக்கள் கலந்து வாழும் சோமையனுாரில் உள்ள ஓட்டுச்சாவடியில், காலை 10 மணிக்குள் 23 சதவீத ஓட்டுக்களை, மக்கள் பதிவு செய்திருந்தனர்.
பழங்குடியின கிராம ஓட்டுச்சாவடிகளில், பரவலாக ஓட்டுப்பதிவு நன்றாயிருந்ததாக, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

