/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இசைக் கலைஞர்களுக்கு நவரத்னா விருது 'கோவையில் திருவையாறு' நிகழ்வில் கவுரவம்
/
இசைக் கலைஞர்களுக்கு நவரத்னா விருது 'கோவையில் திருவையாறு' நிகழ்வில் கவுரவம்
இசைக் கலைஞர்களுக்கு நவரத்னா விருது 'கோவையில் திருவையாறு' நிகழ்வில் கவுரவம்
இசைக் கலைஞர்களுக்கு நவரத்னா விருது 'கோவையில் திருவையாறு' நிகழ்வில் கவுரவம்
ADDED : பிப் 10, 2025 05:49 AM

கோவை, : நரசேஷ் அறக்கட்டளை மற்றும் வாய்ஸ் ஆப் கோவை சார்பில், கோவை, வடவள்ளியில், 'கோவையில் திருவையாறு' நிகழ்ச்சி நடந்தது. இதன் ஒரு பகுதியாக, கர்நாடக இசை, கதாகாலட்சேபம் மற்றும் நாட்டுப்புற கலையில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் 9 பேருக்கு நவரத்னா விருதுகள் வழங்கப்பட்டன.
சாஸ்திரிய சங்கீதம் மற்றும் இசைக் கலைஞர்கள் சூரியநாராயணன் (வளரும் கலைஞர்), பிருந்தா ரகுநாத், சந்திரன், ஜனகமாயாதேவி, மவுனராகம் முரளி, ராமமூர்த்தி ராவ், அபயக்கரம் கிருஷ்ணன் (நடனம்), ஈஸ்வரன் (வள்ளி கும்மி), ஆராவமுதாச்சாரியார் (கதாகாலட்சேபம்) ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. பா.ஜ., மூத்த தலைவர் ஹெச். ராஜா, வாய்ஸ் ஆப் கோவை சுதர்சன், டாக்டர் புவனேஸ்வரன் ஆகியோர் விருதுகளை வழங்கினர்.
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தது. அவர் வர இயலாததால், அவரின் வாழ்த்து செய்தி வீடியோவாக ஒளிபரப்பப்பட்டது.
நிகழ்ச்சியில் ஹெச்.ராஜா பேசியதாவது:
பாரதத்தின் கலாசாரத்தைப் பற்றி, இந்தியர்களுக்கே அறிமுகம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். நமது கலாசாரத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்துவது கலை. வெளிநாடுகளில் கேளிக்கைக்காக பயன்படுத்தும் கலைகளை, அது இசையோ, நடனமோ, நாம் ஆண்டவனை துதிப்பதற்காக பயன்படுத்துகிறோம்.
கலையை மன்னர்கள் போற்றி வளர்த்தனர். இப்போதோ, அரசு அதை மறுத்து, மறைத்து வருகிறது. மக்களாட்சி என்பதால் இனி நாம்தான் அதை வளர்க்க வேண்டும்.கலாசாரம் பண்பாட்டை மறந்து விட்டு நாம் இருந்து பயனில்லை.
ஆன்மாவைக் கொன்று விட்டு, உடல் மட்டும் இருந்து என்ன பயன்? இதுபோன்ற கலையை, பண்பாட்டை வளர்க்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, பாரதத்தின் கலாசாரத்தை, அமெரிக்காவில் உள்ள ஹிந்து பல்கலை வாயிலாக, 2 ஆண்டு ஆன்லைன் படிப்பாக கற்பிக்க, வாய்ஸ் ஆப் சேஞ்ச் மற்றும் பாரத் ஞான் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
மேலும், நோவா ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு டிரோன் பயிற்சி அளிக்கும் ஒப்பந்தமும் கையொப்பமானது.
நிகழ்ச்சியில், பாரத் ஞான் அமைப்பின் நிர்வாகிகள் ஹரி, ஹேமா, நோவா ஏரோஸ்பேஸ் வேலுசாமி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
முன்னதாக 'கோவையில் திருவையாறு சீசன் 6' என்ற இசை நிகழ்ச்சி, நேற்று, வடவள்ளியில் உள்ள சின்மயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்தது. காலை, 8:00 மணிக்கு, குத்துவிளக்கு ஏற்றி, நிகழ்ச்சி துவங்கியது.
இதில், காலை, 8:00 மணியில் இருந்து, இரவு, 8:00 மணி வரை, மங்கள நாதஸ்வர இசை, பரதநாட்டியம், நடன நாடகம், கர்நாடக இசை கச்சேரி, வீணை என, 14 இசை நிகழ்ச்சிகள் நடந்தது. சுமார், 300க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர்.
இதில், பல்வேறு இசைக்கலைஞர்கள் தங்களின் இனிமையான இசை ஆற்றலை வெளிப்படுத்தினர். இது, நிகழ்ச்சிக்கு வந்தவர்களின், கண்கள் மற்றும் காதுகளுக்கு மட்டுமல்லாது, மனதிற்கும் நல்ல விருந்தாய் அமைந்தது.