/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய அறிவியல் தினம்; பள்ளியில் கொண்டாட்டம்
/
தேசிய அறிவியல் தினம்; பள்ளியில் கொண்டாட்டம்
ADDED : மார் 04, 2025 06:09 AM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கோடங்கிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் தினகரன் தலைமை வகித்தார். உலகப் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர்கள் மற்றும் இந்திய அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
சிறப்பு நிகழ்வாக, கடல் வாழ் உயிரினங்கள், அவற்றின் சூழல் சமநிலை, வாழிடங்கள், தகவமைப்புகள், இடம்பெயர்வுகள், வாழ்க்கை சுழற்சி, மனித இனத்திற்கும் கடல் வாழ் உயிரினத்திற்கும் உள்ள தொடர்புகள், காலநிலை மாற்றம், அதன் வாயிலாக மனிதர்களால் ஏற்படும் தீங்குகள் குறித்து ஆசிரியர் சத்தியா பேசினார்.
* தொப்பம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி இடம்பெற்றது. தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் தங்கமணி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் அய்யம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்காட்சியில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களின் படைப்புகள், காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, காற்றழுத்தமானி, காற்றாலை மின் உற்பத்தி, மின் துாக்கி, மின்விசிறி, எளிய மின்சுற்றுகள், எரிமலை, மழைநீர் சேகரிப்பு என, பல்வேறு தலைப்புகளில் கீழ் இடம்பெற்றிருந்த படைப்புகள், அனைவரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
ராசக்காபாளையம் துவக்கப் பள்ளி மாணவர்களும் கண்காட்சியை பார்வையிட்டனர். ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.