/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச்சான்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
/
ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச்சான்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச்சான்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச்சான்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
ADDED : ஆக 01, 2024 10:27 PM
உடுமலை : உடுமலை பகுதிகளில், 4 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய சுகாதார வள மையம், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், நாடு முழுதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படும் மருத்துவ சேவை மற்றும் தரம் ஆகியவை குறித்து மதிப்பிடுகிறது.
படுக்கை வசதி, மருத்துவ சேவை, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்டவை குறித்து நோயாளிகளிடமே கருத்து கேட்டு, நுாற்றுக்கு எவ்வளவு மதிப்பெண் என கணக்கிடப்படுகிறது.
எழுபது மதிப்பெண்களுக்கு மேல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், தேசிய தர நிர்ணய அங்கீகார சான்றிதழ் பெற தகுதியுடையவையாக கருதப்படுகிறது. இச்சான்றிதழ் பெறும் மையத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதி மேம்பாட்டு பணிகளுக்கென வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், 17 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தர நிர்ணய அங்கீகார சான்றிதழ் பெற்றுள்ளன. இதில், உடுமலை, பூளவாடி, பெதப்பம்பட்டி, செல்லப்பம்பாளையம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரச்சான்று பெற்றுள்ளன.
மருத்துவம் மற்றும் சுகாதாரப்பணிகள் துறை வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது. முன்பு, கிராம சுகாதார செவிலியர், துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் என்ற அடிப்படையில் நோயாளிகள் கவனிக்கப்பட்டு, உயர்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவர்.
தற்போது, கிராம அளவிலேயே கூடுதல் மருத்துவ வசதிகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்களில் படுக்கை, ஆய்வகம், அவசர பிரசவ அறுவைசிகிச்சை உள்ளிட்ட வசதி படிப்படியாக கொண்டு வரப்பட்டு வருகிறது.
அவ்வாறு சிறப்பாக பணியாற்றி, சேவை வழங்கி, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன, என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.