/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகளிர் தொழில் முனைவோரை ஊக்குவித்த இயற்கை சந்தை
/
மகளிர் தொழில் முனைவோரை ஊக்குவித்த இயற்கை சந்தை
ADDED : மார் 03, 2025 04:11 AM

வடவள்ளி : வடவள்ளியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், இயற்கை சந்தை நடந்தது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுய உதவி குழுக்கள் வாயிலாக மகளிர் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவி குழுக்கள் வாயிலாக ஆயிரக்கணக்கான மகளிர், தொழில் முனைவோராக மாறியுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வளங்கள் மற்றும் விற்பனைச் சங்கம் சார்பில், 'இயற்கை சந்தை 2025' என்ற பொது சந்தை, வடவள்ளியில் நேற்று முன்தினம் துவங்கப்பட்டது.
இதில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் இயற்கை முறையில் சாகுபடி செய்த காய்கறி, பழங்கள், கீரை வகைகள், மரச்செக்கு எண்ணெய், சிறுதானியங்கள், சிறுதானிய உணவுகள், இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட மதிப்பு கூட்டு பொருட்களை, விற்பனை செய்யும் வகையில், 26 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஏராளமான பொதுமக்கள் வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.
இச்சந்தை நேற்றுடன் நிறைவடைந்தது.