/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுத்திகரிப்பு நிலையம் வேண்டும்: சுத்தமான குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு கிராம மக்கள் கோரிக்கை
/
சுத்திகரிப்பு நிலையம் வேண்டும்: சுத்தமான குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு கிராம மக்கள் கோரிக்கை
சுத்திகரிப்பு நிலையம் வேண்டும்: சுத்தமான குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு கிராம மக்கள் கோரிக்கை
சுத்திகரிப்பு நிலையம் வேண்டும்: சுத்தமான குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு கிராம மக்கள் கோரிக்கை
ADDED : ஆக 06, 2024 06:01 AM

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், சுத்தமான குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில், 12 ஊராட்சி ஒன்றியங்களில், 227 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு பில்லூர், சிறுவாணி, ஆழியார் ஆகிய அணைகளில் இருந்து, தண்ணீர் எடுத்து சுத்தம் செய்து, விநியோகம் செய்யப்படுகிறது. மழைக்காலங்களில் அணையில் செந்நிறத்தில் தண்ணீர் வருவது வழக்கம்.
இந்த தண்ணீரை எவ்வளவு சுத்தம் செய்தாலும், செந்நிறம் மாறாமல் உள்ளது. இந்த தண்ணீரை குடித்தால், உடல் நலம் பாதிக்குமோ என்ற அச்சம், மக்களிடையே எழுந்து வருகிறது. அதனால் சிலர் தங்கள் வீடுகளில் 'ஆர்.ஓ., பிளான்ட்' அமைத்து, அதிலிருந்து குடிநீர் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சிலர் கேன் தண்ணீரை விலைக்கு வாங்கி, குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். மீதமுள்ள மக்கள், செந்நிறத்தில் வரும் தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது காரமடை ஊராட்சி ஒன்றியம், இலுப்ப நத்தம் ஊராட்சியில், ஐந்து இடங்களில் 'எதிர் சவ்வூடு பரவல்' முறையில் தண்ணீரை சுத்தம் செய்யும், சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 2000 லிட்டர் தண்ணீரை சுத்தம் செய்யும் அளவுக்கு, இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கிராம மக்கள் இந்த தண்ணீரை பயன்படுத்திய பிறகு, ஆற்றுத் தண்ணீரை, குடிநீராக பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். மேலும் குடிநீருக்கு என, தினமும் இரண்டு மூன்று குடங்களை மட்டும், பிடித்து வருகின்றனர்.
இது குறித்து இலுப்பநத்தம் ஊராட்சி தலைவர் ரங்கசாமி கூறியதாவது:
இந்த ஊராட்சியில் இலுப்பநத்தம், எஸ்.புங்கம்பாளையம், திருவள்ளுவர் நகர், பகத்தூர் ஆகிய நான்கு இடங்களில் தலா, 12 லட்சம் ரூபாய் செலவில், தண்ணீரை சுத்தம் செய்யும், ஆர்.ஓ., பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து, 2000 லிட்டர் தண்ணீர் சுத்தம் செய்யும் இயந்திரம் வாயிலாக, மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஊராட்சியில் மேலும் சில கிராமங்களில் ஆர்.ஓ., பிளான்ட் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.