/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
55 இடங்களில் நீர் மோர் பந்தல் 9 இடங்களில் 'பச்சை பந்தல்' ;மாநகராட்சி கமிஷனர் துரித நடவடிக்கை
/
55 இடங்களில் நீர் மோர் பந்தல் 9 இடங்களில் 'பச்சை பந்தல்' ;மாநகராட்சி கமிஷனர் துரித நடவடிக்கை
55 இடங்களில் நீர் மோர் பந்தல் 9 இடங்களில் 'பச்சை பந்தல்' ;மாநகராட்சி கமிஷனர் துரித நடவடிக்கை
55 இடங்களில் நீர் மோர் பந்தல் 9 இடங்களில் 'பச்சை பந்தல்' ;மாநகராட்சி கமிஷனர் துரித நடவடிக்கை
ADDED : மே 05, 2024 12:19 AM

கோவை:கோவையில், வாகன ஓட்டிகள் வெப்ப அலையில் இருந்து தற்காத்துக் கொள்ள, மாநகராட்சி சார்பில், 9 இடங்களில், 'பச்சை பந்தல்' அமைக்கப்படுகிறது. மேலும், 55 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. வரும், 6ம் தேதி வரை வெப்ப அலை வீசும்; 7ம் தேதி முதல் மழைப்பொழிவு காணப்படும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும், வாகனங்களில் பொதுமக்கள் செல்லும்போது, வெப்ப அலையால் பாதிக்கப்படுகின்றனர். சிக்னல்களில் காத்திருக்கும்போது, அனல் காற்று வீசுகிறது; தாங்க முடியாதவர்கள் மயக்கம் அடைகின்றனர்.
இதற்கு தீர்வு காண, புதுச்சேரியில் அமைத்திருந்தது போல், கோவையிலும் முக்கியமான சிக்னல்களில், 'பச்சை பந்தல்' அமைக்க முடிவு செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் ரோட்டில் எருக் கம்பெனி பஸ் ஸ்டாப் மற்றும் நான்கு மண்டலங்களில் தலா இரண்டு வீதம் எட்டு இடங்களில், 'பச்சை பந்தல்' அமைக்க, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார்.
அதன்படி, செல்வபுரம் சந்திப்பு, சுந்தராபுரம் சந்திப்பு, டவுன்ஹால் சந்திப்பு, கூட்ஸ் ஷெட் ரோடு, சத்தி ரோடு - சரவணம்பட்டி சந்திப்பு, ராமகிருஷ்ணாபுரம் சந்திப்பு, சிங்காநல்லுார் சந்திப்பு இருபுறமும், ஹோப் காலேஜ் சந்திப்பு ஆகிய இடங்களில், 'பச்சை பந்தல்' அமைக்கப்படுகிறது. இதில், சிங்காநல்லுார் மற்றும் ஹோப் காலேஜ் சந்திப்பு பகுதியில் மட்டும், 5ம் தேதி (இன்று) பணி துவக்கப்படுகிறது.
நீர் மோர் பந்தல்
இதுதவிர, மாநகராட்சி சார்பில், 55 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது; அவ்வழியாகச் செல்வோர் பருகலாம். சிறிய பாட்டில்களில் நிரப்பிக் கொள்ளலாம். மதியம், 9:00 முதல், 12:00 மணி வரை நீர் மோர் வழங்கப்படுகிறது. அந்தந்த வார்டு உதவி/ இளம் பொறியாளர்களுக்கு இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நீர் மோர் தருவிப்பதற்கு ஏற்ப, சில இடங்களில், மதியம், 12:00 முதல், 1:30 வரை வழங்கப்படுகிறது. மாலை, 5:00 மணி வரை வழங்க, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.