ADDED : ஏப் 28, 2026 09:42 PM

மேட்டுப்பாளையம்: காரமடை மற்றும் மேட்டுப்பாளையத்தில் குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க வெளிநபர் நடமாட்டம் குறித்து, பொதுமக்கள் கண்காணித்து தகவல் அளிக்க வேண்டும் என போலீசார் அறிவுரை கூறி வருகின்றனர்.
கோடை விடுமுறையை அடுத்து, பலரும் வீடுகளை பூட்டிவிட்டு சுற்றுலா, சொந்த ஊர், உறவினர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர். இதையடுத்து, மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க, வாகன தணிக்கை, இரவு ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளி நபர்கள் குறித்தும் கண்காணிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கும் இதுதொடர்பாக அறிவுரை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, போலீசார் கூறுகையில், தங்களது பகுதிக்கு அறிமுகம் இல்லாத நபர்கள் யாரேனும் வந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள், விடுதிகள் உரிமையாளர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றனர்.
-----
