/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிதாக தேர்வாகப்போகும் கோவை எம்.பி., இதெல்லாம் செய்வீங்களா? அமைப்புகளின் அம்சமான கோரிக்கைகள்!
/
புதிதாக தேர்வாகப்போகும் கோவை எம்.பி., இதெல்லாம் செய்வீங்களா? அமைப்புகளின் அம்சமான கோரிக்கைகள்!
புதிதாக தேர்வாகப்போகும் கோவை எம்.பி., இதெல்லாம் செய்வீங்களா? அமைப்புகளின் அம்சமான கோரிக்கைகள்!
புதிதாக தேர்வாகப்போகும் கோவை எம்.பி., இதெல்லாம் செய்வீங்களா? அமைப்புகளின் அம்சமான கோரிக்கைகள்!
ADDED : மார் 26, 2024 01:30 AM
-நமது நிருபர்-
கோவையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ள எம்.பி., முதலில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து, தொழில் அமைப்புகள் சார்பில் முக்கியக் கோரிக்கைகள் வலியுறுத்தப்படவுள்ளன.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும், தேசிய அளவில் முக்கிய தொழில் மையமாகவும் பன்முகத் தன்மையுள்ள நகரமாகவும் கோவை வளர்ந்துள்ளது. இதை, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கு, அடிப்படை வசதிகள், கட்டமைப்பு மற்றும் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு, மத்திய, மாநில அரசுகளுக்கே உள்ளது.
குறிப்பாக, மத்திய அரசால் மேற்கொள்ளும் திட்டங்களால் மட்டுமே, இந்த நகரின் தொழில் வளர்ச்சி வேகமடையும் வாய்ப்புள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் கோவை எம்.பி., இதற்காக வலுவாகக் குரல் கொடுத்து, இவற்றை நிறைவேற்ற முன் வரவேண்டுமென்பதே எதிர்பார்ப்பாகவுள்ளது.
கோவையிலுள்ள பல்வேறு தொழில் அமைப்புகளும் இணைந்து சில கோரிக்கைகளைத் தொகுத்து, அவற்றை வேட்பாளர்களிடம் முன் வைக்க முடிவு செய்துள்ளன. இதற்காக பல்வேறு அமைப்புகளிடம் ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது. அதில் இடம் பெற்றுள்ள முக்கியக் கோரிக்கைகள் விபரம்:
விமான நிலைய விரிவாக்கம்!
தமிழகத்தில் ஏழு மேற்கு மாவட்டங்கள் பயன் பெறும் கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய, இதுவரை தமிழக அரசால் ரூ.2,088 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள, கடந்த செப்டம்பரில் கலெக்டரால் செயல்முறை ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதை ரூ.900 கோடி மதிப்பில் மேம்படுத்த விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அந்தப் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும். சர்வதேச விமான நிலைய அந்தஸ்தைப் பெற்றுள்ள கோவை விமான நிலையத்திலிருந்து, வெளிநாட்டு நகரங்களுக்கு புதிய விமான சேவைகளைத் துவக்க வேண்டியது அவசியம். துபாய், தோஹா, கோலாலம்பூருக்கு நேரடி விமான சேவையை துவக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெற்கு ரயில்வேயில் அதிக வருவாய் ஈட்டுவதில் மூன்றாமிடத்தில் உள்ள கோவை சந்திப்பை விரிவாக்கம் செய்ய வேண்டும். மத்திய ஜவுளித்துறைக்குச் சொந்தமாகவுள்ள என்.டி.சி. மில் இடங்களை, ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகிலுள்ள மசூதி, ஸ்டேட் பாங்க் போன்றவற்றுக்கு மாற்று நிலமாக வழங்க வேண்டும். கட்டமைப்புக்கும் இழப்பீடு வழங்கி, தற்போதுள்ள சந்திப்பை மேம்படுத்த வேண்டும்.
வட கோவை ரயில்வே ஸ்டேஷனில் உள்ள சரக்கு மையம் மற்றும் அருகிலுள்ள இந்திய உணவுக்கழக குடோன்கள், பீளமேடு ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள ஸ்டீல் யார்டு ஆகியவற்றை புறநகரப் பகுதிகளுக்கு மாற்ற வேண்டும். அந்த இடங்களில் கூடுதல் பிளாட்பார்ம், கோச்சிங் டெப்போ மற்றும் ரயில் பராமரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். பெங்களூரு, சென்னை, ராமேஸ்வரம், செங்கோட்டை மற்றும் தூத்துக்குடிக்கு இரவு நேர ரயில் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
புறவழிச்சாலைகள்!
விபத்து கேந்திரமாக மாறியுள்ள எல் அண்ட் டி பை பாஸ் ரோட்டை,மிக மிக விரைவாக விரிவாக்கம் செய்ய வேண்டும். கோவையிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை இணைப்பதற்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ள கிழக்கு புறவழிச்சாலைத் திட்டத்தை வேகமாகச் செயல்படுத்த வேண்டும்.
கோவை-கரூர் வரையிலான 120 கி.மீ., விரைவுச் சாலை, மேற்கு தமிழகத்திற்கான ஒரு பெரிய கனவுத் திட்டமாகும், இதுவும் 2019லிருந்து நிலுவையில் உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை ஏற்று, நிதி ஒதுக்கி, விரைவாகப் பணியைத் துவக்க வேண்டும். மிகக்கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ள கோவை-சத்தி ரோடு விரிவாக்கத் திட்டத்தையும் உடனே துவக்குவது அவசியம்.
கானலாகும் மெட்ரோ
கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை, மத்திய அரசின் ஒப்புதலுக்கு தமிழக அரசால் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு விரைவாக ஒப்புதல் வழங்கி, திட்டத்துக்கு 50 சதவீத நிதிப் பங்களிப்பையும் வழங்க வேண்டும்.
கோவையின் பல்வேறு அமைப்புகள் சார்பில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

