/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயம் செய்ய சுதந்திரம் இல்லை! நுாதன முறையில் மனு கொடுத்த விவசாயி
/
விவசாயம் செய்ய சுதந்திரம் இல்லை! நுாதன முறையில் மனு கொடுத்த விவசாயி
விவசாயம் செய்ய சுதந்திரம் இல்லை! நுாதன முறையில் மனு கொடுத்த விவசாயி
விவசாயம் செய்ய சுதந்திரம் இல்லை! நுாதன முறையில் மனு கொடுத்த விவசாயி
ADDED : மே 06, 2024 10:39 PM

பொள்ளாச்சி:''தமிழகத்தில் விவசாயம் செய்ய சுதந்திரம் இல்லை; எனது விவசாய நிலத்தை வீட்டு மனை பட்டாவாக மாற்றி கொடுத்தால் விற்று விட்டு கேரளாவுக்கு சென்று விவசாயம் செய்து கொள்கிறேன்,'' என, பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நுாதன முறையில் விவசாயி மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி அருகேயுள்ள, வேட்டைக்காரன்புதூரை சேர்ந்த விவசாயி பாலசுப்ரமணியன். இவர், கைவிலங்கு போன்று சங்கிலி அணிந்து கொண்டு நுாதன முறையில் மனு கொடுக்க, பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகம் வந்தார்.
சங்கிலியை கையில் அணிந்தபடியே, சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யாவிடம் மனு கொடுத்து, விவசாய நிலத்தை வீட்டுமனைப்பட்டாவாக மாற்றி கொடுக்குமாறு தெரிவித்தார்.
அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வேட்டைக்காரன்புதுாரில், நான்கு ஏக்கர் விவசாய பூமியில், தென்னை சாகுபடி செய்துள்ளேன். அதில் 20 மரத்தில் நீரா, பதனீர், கள் இறக்கி, விற்பனை செய்கிறேன். இயற்கை விவசாயம் செய்கிறேன். தேங்காய்க்கு தமிழகத்தில் உரிய விலை கிடைக்காததாலும் கடும் வறட்சி நிலவுவதாலும் விவசாயம் செய்ய முடியவில்லை.
தண்ணீருக்கு விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. ஒரு டிராக்டர், 2,500 ரூபாய் கொடுத்து வாங்கினாலும், 15 மரங்களுக்கு மட்டுமே பாய்க்க முடிகிறது. கிணற்றில் தண்ணீர் ஊற்றி பாய்த்தால் அதுவும் ஆவியாகிறது.
வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சுற்றுலா சென்று வருவது வேதனையை ஏற்படுத்துகிறது. கள் இறக்கும் விவசாயிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர். பானைகளை உடைத்து வேதனைபடுத்துகின்றனர். இதனால் தென்னை மரங்கள் பாதிக்கப்படுகின்றன.
இந்தியாவில் பல மாநிலங்களில் கள் இறக்க அனுமதி உள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயம் செய்ய சுதந்திரம் இல்லை. எனது விவசாய பூமியை வீட்டுமனை பட்டாவாக மாற்றி, அதை விற்று கேரளாவில் விவசாயம் செய்ய சுதந்திரம் தேடுகிறேன்.
இதற்காக, சிட்டா இணைத்து சப் - கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளேன். வீட்டு மனை பட்டாவாக மாற்றித்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.