தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விளையாட்டா போச்சு!

விளையாட்டா போச்சு!

விளையாட்டா போச்சு!


ADDED : மே 06, 2026 11:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 11:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நேரு ஸ்டேடியத்தில் கழிவறை சுகாதாரம்... பயிற்சி பெறும் மாணவ மாணவியர் ஓட்டம்

கோவை: கோவை நேரு ஸ்டேடியத்தில் கழிவறை பராமரிப்பு சுத்தமாக இல்லை. சாதனை புரியும் உத்வேகத்துடன் இங்கு வரும் மாணவ மாணவியர், சுகாதாரமற்ற கழிவறையை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமானது (எஸ்.டி.ஏ.டி.,) மாணவ, மாணவியரிடம் மறைந்துள்ள விளையாட்டு திறமைகளை ஊக்குவித்து வருகிறது. மாவட்டம் தோறும் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளுடன், நிதியுதவியையும் அளிக்கிறது.

சென்னைக்கு அடுத்து வளர்ந்துவரும் நகரான கோவையில், ரியல் எஸ்டேட் வளர்ச்சியால் விளையாட்டு மைதானங்கள் சுருங்கி வருகின்றன. கோவை நேரு ஸ்டேடியம், ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானம் போன்றவையே விடுமுறை நாட்களில் விளையாட்டுக்கு கை கொடுக்கின்றன.

நேரு ஸ்டேடியத்தில் ஓட்டம், நீளம் தாண்டுதல், கால்பந்து, உயரம் தாண்டுதல், போல் வால்ட் உள்ளிட்ட போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளி, கல்லுாரி நாட்களிலேயே தினமும் நுாற்றுக்கணக்கானோர் காலை, மாலை நேரங்களில் பயிற்சி பெறுகின்றனர்.

கோடை விடுமுறையில் இன்னும் கூடுதலாகவே மாணவர் எண்ணிக்கை இருக்கும். ஆனால், ஸ்டேடியத்தில் உள்ள கழிவறைகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது.

சுகாதாரமற்ற நிலையில் அவசர தேவைக்காக செல்லும் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிறது. மாணவ, மாணவியருக்கு தனித்தனியே கழிவறைகள் உள்ளன. இவை முறையாக பராமரிக்கப்படாததால் படுமோசமாக காட்சியளிக்கின்றன.

அதுவும் ஆண்கள் கழிவறை கதவுகளின்றியும், உள்ளேயே செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. உடல் ஆரோக்கியம் பேணவும், போட்டிகளில் சாதிக்கவும் பயிற்சிக்கு வரும் மாணவ, மாணவியர், இப்படி அவல நிலையில் இருக்கும் கழிவறையை பயன்படுத்தும்போது, நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது.

பயிற்சியின் போது கழிவறைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், மாணவ மாணவியர் சிலர் பயிற்சியை பாதியில் நிறுத்திக் கொண்டதாக பயிற்சியாளர்கள் கூறுகின்றனர்.

மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரியிடம் கேட்டபோது,‘‘மோசமான நிலையில் உள்ள கழிவறைகள் சரி செய்யப்படும்,’’ என்றார்.

இப்படி யாராவது சுட்டிக்காட்டினால் மட்டுமே வேலை நடக்கிறது...என்ன செய்வது!

காசு இருக்கு...மனசு இல்லை! நேரு விளையாட்டரங்க வணிக வளாகத்தில், சுற்றிலும் கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. மாதம் பல லட்சம் ரூபாய் வாடகையாக வருகிறது. இந்த நிதியை பயன்படுத்தி கழிவறைகளை தினமும் துாய்மையாக வைப்பதுடன், பழுதடைந்தவற்றை பராமரிப்பதும் எஸ்.டி.ஏ.டி., அதிகாரிகளிடம் கடமை. ஆனால், அலட்சியமாக இருப்பது மாணவ, மாணவியரின் உடல் நலத்தை கேள்விக்குறியாக்குவதுடன், அவர்களின் எதிர்கால லட்சியத்துக்கும் முட்டுக்கட்டை போடுகிறது என்கின்றனர் விளையாட்டு ஆர்வலர்கள்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us