/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெஞ்சில் ஈரம் இல்லையா? இடுப்பில் தண்ணீர் குடத்துடன் ஏழு மாடிகள் ஏற வச்சிட்டாங்க; துாய்மை பணியாளர்கள் குமுறல்!
/
நெஞ்சில் ஈரம் இல்லையா? இடுப்பில் தண்ணீர் குடத்துடன் ஏழு மாடிகள் ஏற வச்சிட்டாங்க; துாய்மை பணியாளர்கள் குமுறல்!
நெஞ்சில் ஈரம் இல்லையா? இடுப்பில் தண்ணீர் குடத்துடன் ஏழு மாடிகள் ஏற வச்சிட்டாங்க; துாய்மை பணியாளர்கள் குமுறல்!
நெஞ்சில் ஈரம் இல்லையா? இடுப்பில் தண்ணீர் குடத்துடன் ஏழு மாடிகள் ஏற வச்சிட்டாங்க; துாய்மை பணியாளர்கள் குமுறல்!
ADDED : செப் 25, 2024 08:57 PM

கோவை : சித்தாப்புதுாரில் துாய்மை பணியாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு, பார்ப்பதற்குதான் பளபளப்பாக இருக்கிறது. ஆனால் குடத்துடன் குடிநீரை ஏழாவது மாடி வரை, சுமக்க வேண்டிய அவலநிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதன் வாயிலாக, பெண்களின் வாழ்வில் 'விடியல்' விளக்கை ஏற்றி வைத்து சாதனை புரிந்துள்ளது தமிழக அரசு.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சித்தாப்புதுாரில், ஏழு தளங்களில், 226 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, துாய்மை பணியாளர்களுக்கென்று கட்டப்பட்டுள்ளது.
ஒதுக்கீடு பெற்றவர்கள் ரூ.1.10 லட்சம் செலுத்தி, கடந்த ஐந்து மாதங்களாக வசித்து வருகின்றனர். 226 குடியிருப்புகளில், 80 பேர் மட்டுமே தொகை செலுத்தி குடியேறியுள்ளனர். மீதம் உள்ளவர்கள் பணம் செலுத்த முடியாமல் திணறுகின்றனர்.
தண்ணீர் சுமக்க முடியலை
இது ஒருபுறமிருக்க, அடிப்படை வசதிகளின்றி குடியிருப்புவாசிகள் அவதிப்படும் நிலை காணப்படுகிறது. அத்தியாவசிய தேவையான குடிநீருக்கு, கீழே உள்ள குடிநீர் குழாயில் இருந்து ஏழாவது தளத்துக்கு, குடங்களை பெண்கள் துாக்கிச்செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. நான்கு 'லிப்ட்'கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், எதுவும் இயங்கவில்லை.
சித்தாப்புதுார் துாய்மைப் பணியாளர்கள் குடியிருப்போர் நலச்சங்க அமைப்பாளர் முருகேசன் கூறுகையில், ''1969ம் ஆண்டு, இந்த இடத்தில் எங்களுக்கு குடியிருப்பு ஒதுக்கப்பட்டது. துவக்கத்தில் வீட்டு வசதி வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கட்டடம், நாளடைவில் பழுது காரணமாக இடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பின்னர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு, ஆறு ஆண்டுகளுக்கு பிறகு கட்டி முடிக்கப்பட்டது. முதலில் இலவசம் என்றனர்.
பின்னர் ரூ.1.10 லட்சம் கட்டுமாறு கூறினர். வட்டிக்கு பணம் வாங்கி செலுத்தியும் , அடிப்படை வசதிகளின்றி அவதிப்படுகிறோம்,'' என்றார்.
இரக்கம் காட்டணும்!
குடியிருப்புவாசி சாந்தியிடம் கேட்டபோது, ''கடந்த ஐந்து மாதங்களாக இங்கு வசிக்கிறோம். நல்ல தண்ணீர் குடங்களை, ஏழாவது மாடி வரை துாக்கி செல்கிறோம். உட்கார்ந்து, உட்கார்ந்துதான் தண்ணீரை மேலே கொண்டு செல்ல முடிகிறது. இடுப்பும், மூட்டு வலியும் தாங்க முடியவில்லை. தண்ணீர் சுமக்க ஆளில்லாத வீட்டார், என்ன செய்வதென தெரியாமல் தவிக்கின்றனர். எங்களிடம் இந்த அரசு ஏன், இப்படி மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்கிறது என தெரியவில்லை,'' என்றார்.
நகரின் துாய்மைக்கும், சுகாதாரத்துக்கும் பாதுகாவலர்களாக இருக்கும் துாய்மை பணியாளர்களின் பிரச்னைகளுக்கு, உடனடியாக தீர்வு காண வேண்டியது அரசின் கடமை.