/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தன்னம்பிக்கை இருந்தால் யாருமே 'தனி' கிடையாது! வெற்றிக்கான சூத்திரம் சொல்கிறார் இவர்
/
தன்னம்பிக்கை இருந்தால் யாருமே 'தனி' கிடையாது! வெற்றிக்கான சூத்திரம் சொல்கிறார் இவர்
தன்னம்பிக்கை இருந்தால் யாருமே 'தனி' கிடையாது! வெற்றிக்கான சூத்திரம் சொல்கிறார் இவர்
தன்னம்பிக்கை இருந்தால் யாருமே 'தனி' கிடையாது! வெற்றிக்கான சூத்திரம் சொல்கிறார் இவர்
ADDED : செப் 15, 2024 01:41 AM

பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்தால், சிறகுகளாக மாறும் கைகள். என்றாவது ஒரு நாள், அந்த வளையம் அறுபடும் போது, தன்னந்தனியே இந்த உலகை சமாளிக்க வேண்டிய நிலை, அப்படியே பயமுறுத்தும்.என்ன செய்வது, எனக்கு என்ன தெரியும். அப்படியான நிலை ஏற்படும் போது, அதன் வலி இன்னும் உயிரை பிடுங்கும். ஆனால், முதலில் வாழ வேண்டும்... அப்புறம் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், நெருப்பு கங்குகளாக உள்ளுக்குள் எரிந்துக் கொண்டே இருக்கும்.
இப்படியான ஒருவர் தான், கோவையை சேர்ந்த காயத்ரி. கிட்டத்தட்ட மேற்சொன்ன வாக்கியங்களும் இவருக்கு அப்படியே பொருந்தும். நன்றாக பயணித்துக் கொண்டிருந்த வாழ்க்கையில், தனியாக தன் குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு. என்ன செய்வது என்ற புரியாத நிலை. சரி... வாழ்க்கையை நகர்த்த வேண்டுமே!
அப்பாவின் உதவி, வாழ்வதற்கான படியை ஏற்படுத்தியது. பள்ளி குழந்தைகள் பயன்படுத்தும் பைகள் வாங்கி விற்பனை செய்ய துவங்கினார். அதிலும் வருமானம் போதவில்லை. டியூஷன் எடுத்து, நன்றாக உயர்ந்து வரும் போது, அதற்கும் கொரோனா தடை போட்டது.
சமூக வலைதளங்களில் கற்று, ஆங்காங்கே கேட்டறிந்து 'சோப்' தயாரித்து, அருகில் இருப்பவர்களுக்கு கொடுத்தார். ஆனால், சரியா வரலேங்க... என்று பலர் சொல்ல, இதுகுறித்து ஆராய துவங்கினார். சோப்புக்கு பயன்படுத்தும் எண்ணெய் உட்பட பல்வேறு பொருட்களை எப்படி சேர்க்க வேண்டும் என்று தேடல். கொஞ்சம் வெற்றியும் கிடைத்தது.
தொடர்ச்சியாக, நலுங்குமாவு வெட்டிவேர், சார்க்கோல், பச்சை பயிறு, குப்பை மேனி ஆகிய பெயர்களில் சோப் தயாரித்து வழங்கி வருகிறார்.பின், யாரோ சொல்லக் கேட்டு, மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரிக்கு சென்று, தொழில் வாய்ப்பில் முன்னேற பணம் தருகிறீர்களாமே என்று வெள்ளந்தியாய் கேட்க, அங்கே இருந்த அதிகாரிகள் பார்த்திபன், தினேஷ்குமார் ஆகியோர், அங்குள்ள 'இன்குபேஷன் சென்டர்'ல் இணைத்து, entrepreneur development innovation india வாயிலாக நிதி பெற்று, இயற்கை சார்ந்த பொருட்களை கொண்டு 'பஞ்ச சக்தி மல்டி பர்பஸ் ஆயில்' தயாரித்துள்ளார். ஆனால், மேற்சொன்ன நிதி பெற, நிபுணர் குழுக்களின் பல்வேறு கேள்விக்கு விடையளிக்க வேண்டும். அதில் அவர்களுக்கு திருப்தி ஏற்படும் பட்சத்தில் தான், புதிதாக ஒரு 'புராடெக்ட்' கண்டுபிடிக்க, அந்த பொருள், மக்கள் மத்தியில் எவ்வாறு சேரும் என்று கணித்தே நிதி தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் கண்டுபிடித்து, சந்தையில் உலவி வரும் இந்த எண்ணெய், பல உபாதைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் என இவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
இதை வாங்கி பயன்படுத்தியவர்கள், தங்களின் நல்ல அனுபவங்களை பகிர்ந்துள்ளனர் என்றும் இவர் தெரிவிக்கிறார். இது மட்டுமல்லாமல், புதிதாக தொழில் துவங்குவோருக்கும் பயிற்சி அளித்து, 'ஹெர்போ குயின்' என்ற நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். பல அமைப்புகள் சார்பிலும், விருது வழங்கப்பட்டுள்ளது. தன்னால் முடிந்தது... எல்லோராலும் முடியும் என்று 'பஞ்ச்' வைத்து, வெற்றிக்கு அழைக்கிறார்.
தொடர்புக்கு: 75488 08220.