/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாட்டுக்கோழி இறைச்சியிலும் பித்தலாட்டம்: அசைவ பிரியர்கள் குமுறல்
/
நாட்டுக்கோழி இறைச்சியிலும் பித்தலாட்டம்: அசைவ பிரியர்கள் குமுறல்
நாட்டுக்கோழி இறைச்சியிலும் பித்தலாட்டம்: அசைவ பிரியர்கள் குமுறல்
நாட்டுக்கோழி இறைச்சியிலும் பித்தலாட்டம்: அசைவ பிரியர்கள் குமுறல்
ADDED : ஜூன் 30, 2024 10:52 PM
பொள்ளாச்சி:ஓட்டல்களில், நாட்டுக்கோழி என்ற பெயரில் சமைத்த இறைச்சி வழங்கப்படுவது உண்மைதானா என்பதை கண்டறிய துறை ரீதியான அதிகாரிகள் ஆய்வு நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. அவ்வகையில், வீட்டு முற்றத்தில் கூண்டுகளில் வளர்க்கப்பட்ட நாட்டுக்கோழிகள், பண்ணைத் தொழிலாகவும் மாறி வருகிறது.
பிராய்லர் கோழியைவிட, நாட்டுக் கோழி இறைச்சியின் சுவையும், சத்தும் அதிகம் என்பதால், அசைவப் பிரியர்கள் நாட்டுக்கோழியையே விரும்பி சாப்பிடுகின்றனர்.
ஓட்டல்களில், அவைப் பிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சமைத்த நாட்டுக்கோழி இறைச்சியும் பரிமாறப்படுகிறது. ஆனால், சில கடைகளில், நாட்டுக் கோழி இறைச்சியின் சுவை மாறுபடுவதாகவும், கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்படுவதாகவும் புகார் எழுகிறது.
அசைவப் பிரியவர்கள் கூறியதாவது:
பெரும்பாலான இறைச்சிக் கடைகளில், கலப்பின நாட்டுக் கோழிகளே அதிகம் விற்கப்படுகிறது. வாடிக்கையாளர்களும் அதனை நாட்டுக்கோழி என நினைத்து, அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். அதன்பின், இறைச்சியை ருசித்த பின்னரே, ஏமாற்றம் அடைந்திருப்பது தெரியவருகிறது.
இதேநிலை, ஓட்டல்களிலும் தொடர்கிறது. சுவை மற்றும் புரதச்சத்து வேண்டி, நாட்டுக்கோழி இறைச்சி 'ஆர்டர்' செய்தால், சமைத்த கலப்பின நாட்டுக் கோழி இறைச்சியே பரிமாறப்படுகிறது.
வியாபார நோக்கத்தில், அசைவப் பிரியர்களை ஏமாற்ற சிலர் முயற்சிக்கின்றனர். உணவு பாதுகாப்பு துறையினர், ஆய்வு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.