/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொத்து மட்டுமல்ல... கடனையும் அடைக்கணும்! எச்சரிக்கை தேவை என்கிறார் கோவை வக்கீல்
/
சொத்து மட்டுமல்ல... கடனையும் அடைக்கணும்! எச்சரிக்கை தேவை என்கிறார் கோவை வக்கீல்
சொத்து மட்டுமல்ல... கடனையும் அடைக்கணும்! எச்சரிக்கை தேவை என்கிறார் கோவை வக்கீல்
சொத்து மட்டுமல்ல... கடனையும் அடைக்கணும்! எச்சரிக்கை தேவை என்கிறார் கோவை வக்கீல்
ADDED : செப் 07, 2024 01:52 AM

''சொத்துக்களை வாங்கும்போது, தாய் பத்திரங்களில் இவ்வாறு நிபந்தனைகள் இருந்தால், அந்த கடன் தீர்க்கப்பட்டுவிட்டதா அல்லது கடன் வழங்கிய நபர் அதனை வசூலிக்க வழக்கு ஏதாவது தாக்கல் செய்து, நீதிமன்ற நடவடிக்கை நிலுவையில் உள்ளதா என்கிற விபரங்களை சரிபார்த்த பிறகே சொத்துக்களை வாங்க வேண்டும்,'' என்கிறார் கோவை வக்கீல் நாகராஜன்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
சில ஆவணங்களில் கூட்டு குடும்ப அங்கத்தினர்களுக்கு இடையே பாகப்பிரிவினை செய்யும்போது, ஒவ்வொரு பாகஸ்தருக்கும் அவரவர் அடைந்து அனுபவித்துக்கொள்ள வேண்டிய சொத்துக்களின் விபரமும், அந்த சொத்துக்களை அடையும் நபர் தீர்க்க வேண்டிய கூட்டு குடும்ப கடன்களும் பட்டியலில் இடப்பட்டிருக்கும்.
எனவே, சொத்துக்களை அடைந்து அனுபவிக்கும் பாகஸ்தருக்கு குடும்ப கடன்களை அடைக்க வேண்டிய பொறுப்பும் சட்டப்படி வந்து சேர்ந்துவிடுகிறது. சொத்துக்களை வாங்கும்போது, தாய் பத்திரங்களில் இவ்வாறு நிபந்தனைகள் இருந்தால், அந்த கடன் தீர்க்கப்பட்டுவிட்டதா அல்லது கடன் வழங்கிய நபர் அதனை வசூலிக்க வழக்கு ஏதாவது தாக்கல் செய்து, நீதிமன்ற நடவடிக்கை நிலுவையில் உள்ளதா என்கிற விபரங்களை சரிபார்த்த பிறகே சொத்துக்களை வாங்க வேண்டும்.
நீதிமன்ற தீர்ப்புகளின் வாயிலாக சொத்தின் உரிமையை வைத்திருப்பவரிடம் இருந்து சொத்து வாங்கும்போது, அந்த தீர்ப்பு சம்பந்தப்பட்ட சார் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா, மேலும், 'எக்ஸ்பார்ட்டி' தீர்ப்பா, இறுதி தீர்ப்பா என்பதை பார்க்க வேண்டும்.
தற்போது பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நீதித்துறை வழக்கு விபரங்களை, 'இ-கோர்ட்' இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளும் வசதி வந்துவிட்டது.
அசல் ஆவணத்தின் பின்புறம், நீதிமன்ற முத்திரையும், வழக்கு எண்ணும் குறிப்பிடப்பட்டு இருந்தால், அதில் உள்ள வழக்கு எண்ணை வைத்து 'இ-கோர்ட்' இணயதளம் வாயிலாக தற்போதைய நிலையை, அறிந்துகொண்டு முடிவுக்கு வரலாம்.
இருப்பினும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பட்சத்தில் அச்சொத்தை வாங்குவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு வாங்கினாலும் அச்சொத்தின் உரிமை கிரையம் பெற்றவருக்கு வந்துவிடாது. அது நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது.
எனவே, நீண்டகால சட்டப்போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்பதால் எச்சரிக்கை தேவை. இதில் விதிவிலக்கு 'லோக் அதாலத்' நீதிமன்றம் வாயிலாக இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு, அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட சமரச தீர்ப்பு எனில் அச்சொத்தை வாங்கலாம். ஏனெனில் 'லோக் அதாலத்' நீதிமன்றம் மூலம் வழங்கப்படும் தீர்ப்புகளுக்கு மேல்முறையீடு செய்ய இயலாது.
இவ்வாறு, அவர் கூறினார்.