/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தல் விதிகளால் வண்டல் மண் எடுக்க அனுமதி மறுக்கும் அதிகாரிகள்
/
தேர்தல் விதிகளால் வண்டல் மண் எடுக்க அனுமதி மறுக்கும் அதிகாரிகள்
தேர்தல் விதிகளால் வண்டல் மண் எடுக்க அனுமதி மறுக்கும் அதிகாரிகள்
தேர்தல் விதிகளால் வண்டல் மண் எடுக்க அனுமதி மறுக்கும் அதிகாரிகள்
ADDED : ஏப் 26, 2024 01:38 AM

மேட்டுப்பாளையம்;பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் படிந்துள்ள, வண்டல் மண்ணை எடுக்க, தேர்தல் கமிஷனர்கள் அனுமதி வழங்க வேண்டும் என, பவானி ஆற்று நீர் பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிறுமுகையில் பவானி ஆற்று நீர் பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு துணைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:
சிறுமுகை, ஜடையம்பாளையம், பள்ளேபாளையம், இலுப்பநத்தம், இரும்பறை, முடுதுறை, சின்னக்கள்ளிப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் உள்ள, 30க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள், பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறையும்போது, தண்ணீர் தேங்கி இருந்த பகுதிகளில், படிந்துள்ள வண்டல் மண்ணை, மாட்டு வண்டிகளில் எடுத்து விவசாயம் செய்து வந்தனர்.
இதனால் விவசாய பயிர்களுக்கு, இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு உரங்கள் போடத் தேவையில்லை. பயிர்களும் நன்கு வளர்ந்து, மகசூல் அதிகரிக்கும்.
தற்போது பவானிசாகர் அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தண்ணீர் தேங்கி இருந்த பகுதிகளில், வண்டல் மண் அதிகளவில் படிந்துள்ளன. அவற்றை எடுக்க அனுமதி வழங்க கோரி, விவசாயிகள் சங்கத்தின் சார்பில், மாவட்ட கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தோம். இதுவரை நடவடிக்கை ஏதுமில்லை.
பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தேர்தல் நடத்தை விதிமுறைகள், இருப்பதால் ஜூன் மாதம் நான்காம் தேதிக்கு மேல் தான் கூற முடியும் என கூறினர். ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கும். அப்போது பில்லூர் அணைக்கும், பவானிசாகர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்கும். அணையின் நீர்த்தேக்க பகுதியில், தண்ணீர் நிரம்பும். அதனால் வண்டல் மண் எடுக்க முடியாத நிலை ஏற்படும்.
தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி, அதிகாரிகள் அனுமதி வழங்காமல் இருந்து வருவது தெரிய வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள், அணையில் எவ்வளவு அளவிற்கு வண்டல் மண் எடுப்பது என்பது குறித்து அளவீடு செய்து, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்துள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். எனவே பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில், பவானிசாகர் அணையில் படிந்துள்ள வண்டல் மண்ணை எடுக்க, தலைமை தேர்தல் கமிஷனருக்கும், தமிழக தேர்தல் கமிஷனருக்கும் கோரிக்கை மனு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் நலன் கருதி,அணையில் வண்டல் மண் எடுக்க, தேர்தல் கமிஷனர்கள் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு துணைத்தலைவர் பேசினார்.
கூட்டத்தில் கோவிந்தராஜ் வரவேற்றார். சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். ரத்தினகுமார் நன்றி கூறினார்.

