/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூறாவளி காற்றால் ஒரு லட்சம் வாழை மரங்கள் சேதம்
/
சூறாவளி காற்றால் ஒரு லட்சம் வாழை மரங்கள் சேதம்
ADDED : மே 06, 2024 12:30 AM

மேட்டுப்பாளையம்:சிறுமுகை பகுதியில், வீசிய சூறாவளி காற்றால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில், கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக மழை பெய்யவில்லை.
கோடை வெயில் அதிகமாக வீசுவதால், மக்கள் வெளியே நடமாட்டம் குறைந்தது. மேலும் பவானி ஆற்றில் நீரோட்டம் இல்லாததால், ஆற்று தண்ணீரை நம்பி, பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை, 3 மணி அளவில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை ஆகிய பகுதிகளில், பலத்த சூறாவளி காற்றுடன் பத்து நிமிடம் மழை பெய்தது. மழை பெய்யும் முன், வீசிய சூறாவளி காற்றால், சிறுமுகை, லிங்காபுரம், காந்தவயல், ஜடையம்பாளையம், மாதனூர் ஆகிய பகுதிகளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: சிறுமுகை பகுதியில் தண்ணீர் இல்லாமல், காய்ந்து வந்த வாழை மரங்கள், சூறாவளி காற்றால் முறிந்து விழுந்தன.
ஒவ்வொரு விவசாயியும் கடன் பெற்று வாழை பயிர் செய்துள்ளோம். இன்னும் இரண்டு மாதத்தில், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த, வாழை மரங்கள், சூறாவளி காற்றால் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயிகளுக்கும் பல லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வறட்சியான காலத்தில் இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட இந்த சேதத்திற்கு, தமிழக அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
அன்னுார் வட்டாரத்தில், நேந்திரன், கதலி, ரோபஸ்டோ உள்ளிட்ட ரக வாழைகள் 1,500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் கேரள மாநிலத்திற்கும், குறைந்த அளவில் உள்ளூரிலும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று முன்தினம் மாலை அன்னுார் வடக்கு பகுதியில் சுழல் காற்று வீசியது. மழையுடன் காற்றும், சுழன்று, சுழன்று அடித்தது. இதில் ராம்நகர், செல்லனுார், அன்னுாரின் வடக்கு பகுதியில் 5,000 வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.