/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருமூர்த்தியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு பி.ஏ.பி., முதல் மண்டலம் 2ம் சுற்றுக்கு வழங்கல்
/
திருமூர்த்தியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு பி.ஏ.பி., முதல் மண்டலம் 2ம் சுற்றுக்கு வழங்கல்
திருமூர்த்தியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு பி.ஏ.பி., முதல் மண்டலம் 2ம் சுற்றுக்கு வழங்கல்
திருமூர்த்தியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு பி.ஏ.பி., முதல் மண்டலம் 2ம் சுற்றுக்கு வழங்கல்
ADDED : மார் 28, 2024 05:05 AM

உடுமலை, : பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனம், இரண்டாம் சுற்றுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து பிரதான கால்வாயில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
பி.ஏ.பி., முதலாம் மண்டலத்திற்குட்பட்ட, 94 ஆயிரத்து, 521 ஏக்கர் நிலங்களுக்கு, பிப்., 12 முதல், மே 22 வரை, 100 நாட்களுக்கு, உரிய இடைவெளி விட்டு, இரண்டரை சுற்றுக்களில், 5 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
முதல் சுற்றுக்கு நீர் வழங்கப்பட்டு, கடந்த, 12ம் தேதி நிறைவு செய்யப்பட்டது. தொடர்ந்து, பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, காண்டூர் கால்வாய் வழியாக நீர் கொண்டு வந்து, திருமூர்த்தி அணையில் சேகரிக்கும் பணி நடந்தது.
அணை நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து, நேற்று காலை முதல், இரண்டாம் சுற்றுக்கு, பிரதான கால்வாயில் நீர் திறக்கப்பட்டது.
முதலில், வினாடிக்கு, 200 கனஅடி திறக்கப்பட்டு, படிப்படியாக அதிகரித்து, 700 கனஅடி வரை நீர் திறக்கப்பட்டிருந்தது. படிப்படியாக முழு கொள்ளளவு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு, கிளைக்கால்வாய்களுக்கு திறக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'முதல் மண்டலம், இரண்டாம் சுற்றுக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றில், 25 நாட்கள் வரை நீர் வழங்கப்பட்டு, நிறைவு செய்யப்படும். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பாசன நீர் திருட்டு சம்பவங்களை தடுக்க, கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், நீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.
அணை நீர்மட்டம்
திருமூர்த்தி அணையில் நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 60 அடியில், 56.50 அடி நீர்மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான, 1,935.25 மில்லியன் கனஅடியில், 1,784.96 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது.
அணைக்கு வினாடிக்கு, பாலாறு, ஒரு கனஅடி, காண்டூர் கால்வாய், 771 கனஅடி என, 772 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து, 700 கனஅடி நீர் பாசனத்திற்கும், குடிநீருக்கு, 21 கனஅடி நீர் திறக்கப்பட்டிருந்தது. நீர் இழப்பு, 14 கனஅடியாக இருந்தது.