/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
/
ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
ADDED : ஜூலை 24, 2024 12:17 AM
பெ.நா.பாளையம்:கோவை மாநகராட்சி அருகே உள்ள ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளான ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகளை அருகே உள்ள மாநகராட்சிகளுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இம்முடிவால் நன்மைவிட தீமைதான் அதிகம். இத்திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது, ஊராட்சியாக இருக்கும் பகுதிகள் மாநகராட்சி உடன் இணைக்கப்பட்டால், அப்பகுதியில் கட்டட அனுமதி, அதிக வரி விதிப்பு, தண்ணீர் இணைப்பு, சான்றிதழ்கள் பெற அதிகாரிகளை சந்தித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக மாநகராட்சியை அணுகுவதிலும், அதிகாரிகளை சந்திப்பதிலும் கிராம மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும்.
இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில்,' தற்போது உள்ள கோவை மாநகராட்சியின் பரப்பு பெரியதாகவும், கையாள முடியாததாகவும் உள்ளது. இந்நிலையில், கிராம பஞ்சாயத்துக்களை கோவை மாநகராட்சி உடன் இணைப்பதால், குறிப்பிட்ட ஊராட்சியில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள். ஒரு கிராம பஞ்சாயத்து அதன் மக்கள் தொகை, பரப்பளவு, வருவாய் அதிகமாக இருந்தால், அதை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். அதுபோல பேரூராட்சியை, நகராட்சியாகவும் நகராட்சியை மாநகராட்சியாகவும், மாற்றலாம். அதை விடுத்து, ஊராட்சியை நேரடியாக மாநகராட்சியுடன் இணைத்தல் கூடாது. தற்போது, குருடம்பாளையம் ஊராட்சியில், 100 நாள் வேலை திட்டத்தை நம்பி விவசாய கூலி தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். மாநகராட்சியாக மாற்றும்போது, அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும். இதை அடிப்படையாகக் கொண்டு குருடம்பாளையம், அசோகபுரம் ஊராட்சிகளை கோவை மாநகராட்சி உடன் இணைக்கும் முடிவை, தமிழக அரசு கைவிட வேண்டும்' என்றனர்.

