/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பு வழக்கு விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
/
ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பு வழக்கு விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பு வழக்கு விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பு வழக்கு விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
ADDED : ஜூன் 07, 2024 01:06 AM
-நமது நிருபர்-
கோவை மாநகராட்சியில் 100க்கும் மேற்பட்ட ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவற்றைப் பற்றிய விபரங்களை சமர்ப்பிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள நுாற்றுக்கணக்கான லே-அவுட்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள், பூங்கா, விளையாட்டு மைதானம் மற்றும் சமுதாயக்கூடம் போன்ற பொது பயன்பாட்டுக்குரிய இடங்களாக (ரிசர்வ் சைட்) விடப்பட்டுள்ளன. இந்த இடங்களில் ஏராளமான இடங்கள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.
பொது ஒதுக்கீட்டு இடங்களை, வேறு எந்த பயன்பாட்டுக்கும் மாற்ற முடியாது என்று சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்களில் பல்வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும் அவை தொடர்ந்து மீறப்படுகின்றன.
போலி வரைபடங்கள் தயாரித்து, இந்த இடங்களை ஆக்கிரமிப்பு செய்து, கட்டடங்கள் கட்டுவதும், வாடகைக்கு விடுவதும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.
சமூக ஆர்வலர்களும், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளும் இவற்றை மீட்கப் போராடி வருகின்றனர். கோவையில் இந்த ரிசர்வ் சைட் அபகரிப்பு, ஆக்கிரமிப்பு அத்துமீறல் அதிகளவில் நடந்து வருகிறது.
ரிசர்வ் சைட் மீட்பு என்பது, கோவைக்கு வரும் மாநகராட்சி கமிஷனர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் நடக்கிறதே தவிர, தொடர் முயற்சியாக நடப்பதில்லை.
இந்நிலையில், தமிழகத்திலுள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், பதில் மனு தாக்கல் செய்ய வேண்டிய கோர்ட் வழக்குகள், கோர்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் மீது, அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட வழக்குகள் நிலுவை குறித்து, நகராட்சி நிர்வாக இயக்குனரால் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இதற்காக, நிலுவையில் உள்ள வழக்குகளின் பட்டியலை இணைத்து, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் கமிஷனர்களுக்கு, நகராட்சி நிர்வாக இயக்குனர் சார்பில், கடந்த மே 30 அன்று முக்கியமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள வழக்குகளின் விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
நிலுவையிலுள்ள வழக்குகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுக்களின் நகல்களை, ஜூன் 6 அன்றும், கோர்ட் உத்தரவுகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட விபரங்களுக்கான அறிக்கையை ஜூன் 11 அன்றும், நகராட்சி நிர்வாக இயக்குனர் முன்பாக நேரில் ஆஜராகி சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில், மாவட்ட சார்பு நீதிமன்றம் முதல் சென்னை ஐகோர்ட் வரையிலும், பல நுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள ரிசர்வ் சைட்கள் தொடர்பான 100க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவற்றில் பெரும்பாலான வழக்குகளில், மாநகராட்சியால் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை; தடை உத்தரவுகளை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இங்குள்ள அதிகாரிகள் சிலர், ஆக்கிரமிப்பாளர்களிடம் கை கோர்த்துக்கொண்டு, வழக்குகளை நீர்த்துப் போகச் செய்வதுடன், காலத்தைக் கடத்தி, மாநகராட்சிக்கு எதிராக தீர்ப்பு கிடைப்பதற்கும் வழி வகுக்கின்றனர்.
நகராட்சி நிர்வாக இயக்குனரின் உத்தரவால், இந்த வழக்குகளுக்கு புத்துயிர் கிடைக்கும்; சட்டரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உறுதியாக எடுக்கப்படும் என்றும் நம்பிக்கை பிறந்துள்ளது.