/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூட்டு அறுவை சிகிச்சை காப்பீடு தொகை வழங்க உத்தரவு
/
மூட்டு அறுவை சிகிச்சை காப்பீடு தொகை வழங்க உத்தரவு
ADDED : ஆக 01, 2024 01:50 AM
கோவை : மூட்டு அறுவை சிகிச்சைக்கான, காப்பீட்டு தொகை வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
பொள்ளாச்சி அருகேயுள்ள மாக்கினாம்பட்டியை சேர்ந்த செழியன், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், 2022, ஆக., முதல் ஓராண்டிற்கு, ஐந்து லட்சம் ரூபாய்க்கு, மருத்துவ காப்பீடு செய்தார். இந்நிலையில், அவருக்கு மூட்டுவலி ஏற்பட்டதால், கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இதற்கான மருத்துவ சிகிச்சை தொகை, 2.25 லட்சம் ரூபாய் வழங்க கோரி, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தார். ஆனால், 80,000 ரூபாய் மட்டும் அனுமதி அளித்தனர்.
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கேட்டபோது, 'ஏற்கனவே முன் நோய் பாதிப்பு இருந்ததை, பாலிசியில் சேரும் போது குறிப்பிடவில்லை' என்று காரணம் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட செழியன், இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரர் மூட்டு அறுவை சிகிச்சைக்கான கட்டணம், 2.25 லட்சம் ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.