/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிரம்பி வழியும் செங்கத்துறை தடுப்பணை
/
நிரம்பி வழியும் செங்கத்துறை தடுப்பணை
ADDED : ஆக 01, 2024 01:03 AM

சூலுார் : புனரமைக்கப்பட்ட செங்கத்துறை தடுப்பணை நிரம்பி வழிவதால், சுற்றுவட்டார விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சூலுார் பேரூராட்சிக்கு உட்பட்ட செங்கத்துறை ரோட்டில் எஸ்.எப்., எண் 3 ல் செங்கத்துறை தடுப்பணை உள்ளது. இத்தடுப்பணைக்கு, திருச்சி ரோட்டின் தெற்கு பகுதியில் உள்ள நீர் வழித்தடங்கள் மூலம் மழை நீர் வரும். தடுப்பணை நிறைந்து, நொய்யல் ஆற்றுக்கு செல்லும். இத்தடுப்பணை நீரால், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் பலன் பெற்று வந்தன.
இந்நிலையில், கடந்த, 2019 ல் பெய்த கன மழை காரணமாக, இத்தடுப்பணை சேதமடைந்தது. இதனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக மழை பெய்தாலும், தடுப்பணையில் தண்ணீர் சேகரமாகாமல், நொய்யல் ஆற்றை நோக்கி சென்றது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்தனர். தடுப்பணையை புனரமைக்க, அரசுக்கு தொடர் கோரிக்கைகளை விவசாயிகள் விடுத்தனர். இதையடுத்து, தடுப்பணையை புனரமைக்க, 1 கோடியே, 89 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிகள் வேகமாக நடந்து முடிந்தன. தற்போது, நொய்யல் ஆற்றில் தண்ணீர் செல்வதால், குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டன. சூலுார் குளங்கள் நிரம்பி, செங்கத்துறை தடுப்பணைக்கு தண்ணீர் செல்கிறது. இதனால், தடுப்பணை நிரம்பி வழிகிறது.
இதுகுறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க சூலுார் நகர தலைவர் முத்துசாமி கூறுகையில், தொடர்ந்து மனு அளித்து கோரிக்கையை வலியுறுத்தி வந்தோம். அதன் பயனாக தற்போது புனரமைக்கப்பட்ட தடுப்பணை நிரம்பி வழிவது மகிழ்ச்சியை அளிக்கிறது, என்றார்.
இதுகுறித்து சூலுார் கிழக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் ரவிக்குமார் கூறுகையில், கட்சி சார்பில் பல மனுக்கள் அளிக்கப்பட்டது. அதன் பயனாக பணிகள் நடந்து முடிந்தன. தடுப்பணையில் தண்ணீர் தேங்கி உள்ளதால், சுற்றுவட்டார விவசாய நிலங்கள் பயன் பெறும், என்றார்.