/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழை கைகொடுத்ததால் நெல் சாகுபடி தீவிரம்
/
மழை கைகொடுத்ததால் நெல் சாகுபடி தீவிரம்
ADDED : செப் 06, 2024 02:36 AM

ஆனைமலை:ஆனைமலை விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. இப்பகுதியில், ஆழியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு வழங்கப்படும் நீரை பயன்படுத்தி, நெல், கரும்பு, தென்னை உள்ளிட்ட சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டன.
போதிய லாபம் இருந்ததால், மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை முதல் போகமும், செப்டம்பர் முதல் ஜனவரி மாதம் வரை இரண்டாம் போகமும் நெல் சாகுபடி நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், தென்மேற்கு பருவமழை மற்றும் ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பை பொறுத்து, விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.
கடந்தாண்டு போதிய பருவமழை இல்லாத சூழலில், அனைத்து விவசாயிகளும் நெல் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பெய்த பருவமழை மற்றும் ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும் நீர் திறப்பால், விவசாயிகள் விளை நிலங்களை உழுது சீரமைத்தனர்.
முதல் போக சாகுபடிக்காக நாற்றங்கால் விட்டு, நாற்று நடும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர். தற்போது அவை வளர்ச்சியடைந்து வரும் சூழலில், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு சில பகுதிகளில் ஒரு மாதத்துக்குள் அறுவடை பணிகள் துவங்கப்படும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
பசுமை திரும்பியது
பருவமழை பெய்து, ஆனைமலை பகுதி முழுவதும் நெல் சாகுபடி செய்து, பச்சை பசேலென நிலங்கள் காட்சியளிக்கின்றன. பசுமை திரும்பி, நெல் பயிர் பசுமையாக காட்சியளிப்பது கண்களுக்கு விருந்து அளிக்கின்றன. வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணியர், நெல் வயல்களில் நின்று, 'போட்டோ' எடுத்துச் செல்கின்றனர்.