/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாக்கு மர நாற்றுகள் விற்பனைக்கு தயார்
/
பாக்கு மர நாற்றுகள் விற்பனைக்கு தயார்
ADDED : ஜூன் 18, 2024 10:36 PM

மேட்டுப்பாளையம்:கல்லாறு தோட்டக்கலை பண்ணையில் 1.60 லட்சம் பாக்கு மர நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பாக்கு நாற்றுகளை விவசாயிகளும், பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் தமிழக அரசின் கல்லாறு தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது. இங்கு எலுமிச்சை, கொய்யா, மாதுளை, பலா, திராட்சை, மங்குஸ்தான், துரியன், லிச்சி, ரம்புட்டான், மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், இலவங்கப்பட்டை, பாக்கு போன்ற நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது இங்கு 1.60 லட்சம் பாக்கு மர நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணை அதிகாரிகள் கூறுகையில், ''கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணையில், நான்கு ஆண்டுகளில் பலன் தரக்கூடிய 1.20 லட்சம் மொஹித் நகர் பாக்கு மர நாற்றுகள், 40 ஆயிரம் மங்களா பாக்கு மர நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒரு நாற்றின் விலை ரூ.20.
கோவை, திருப்பூர், ஈரோடு, மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் இந்த பாக்கு நாற்றுகளை ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர். வார இறுதி நாட்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாக்கு நாற்றுகள் விற்பனை ஆகின்றன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாற்றுகளை வாங்கி கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 8526371711, 8778645182 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்,'' என்றனர்.