/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிரம்பும் நிலையில் பரம்பிக்குளம் அணை
/
நிரம்பும் நிலையில் பரம்பிக்குளம் அணை
ADDED : ஆக 20, 2024 10:20 PM

பொள்ளாச்சி : பி.ஏ.பி., பாசன திட்டத்தில், முக்கிய அணையான பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து உள்ளதால், நிரம்பும் நிலையில் உள்ளது.
பி.ஏ.பி., பாசன திட்டத்தில், மேல்நீராறு, கீழ்நீராறு, அணைகளில் இருந்து சோலையாறு அணைக்கு நீர் கொண்டு வரப்படுகிறது. நீராறு, சோலையாறு, வால்பாறை பகுதியில் பெய்த மழையால், நீர்வரத்து அதிகரித்து, சோலையாறு அணை கடந்த, ஜூலை மாதம் 19ம் தேதி நிரம்பியது.
இதையடுத்து, சோலையாறு அணையின் சேடல்டேம் வழியாக வெளியேற்றப்பட்ட தண்ணீர் பரம்பிக்குளம் அணையை நோக்கி பயணித்தது. இதுதவிர, பரம்பிக்குளம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
மொத்தம், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர துவங்கியது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணையில், 71 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது. அணையின் மொத்த நீர்க்கொள்ளளவான, 17.820 டி.எம்.சி.,யில், 17.589 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.
இந்நிலையில், பரம்பிக்குளம் அணைக்கு, வினாடிக்கு, 930 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து, டனல் வழியாக துாணக்கடவு அணைக்கு 450 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. துாணக்கடவில் இருந்து, டனல் வழியாக சர்க்கார்பதி நீர்மின் உற்பத்தி நிலையத்துக்கு சென்று, காண்டூர் கால்வாய் வழியாக, திருமூர்த்தி அணைக்கு நீர் செல்கிறது.
பரம்பிக்குளம் அணையின் முழுக்கொள்ளளவும் நிரம்பி நீர் ததும்பும் நிலையில் உள்ளது. இந்நிலையில், லேசான மழை பொழிவும் உள்ளது. அதனால், அணைக்கு நீர்வரத்து அபரிமிதமாக இருந்தால், பாதுகாப்பு கருதி, மதகுகள் வழியாக உபரிநீரை வெளியேற்ற நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'இரு ஆண்டுக்கு முன், பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்தது. அதன்பின், மதகு சீரமைக்கப்பட்டு உறுதியாக உள்ளது. அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், நீர் வெளியேறும் பகுதி, மதகு பகுதி, கரை பகுதிகளை கண்காணித்து வருகிறோம்,' என்றனர்.