/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிரம்பி ததும்பும் பரம்பிக்குளம் அணை பாசன விவசாயிகள் மகிழ்ச்சி
/
நிரம்பி ததும்பும் பரம்பிக்குளம் அணை பாசன விவசாயிகள் மகிழ்ச்சி
நிரம்பி ததும்பும் பரம்பிக்குளம் அணை பாசன விவசாயிகள் மகிழ்ச்சி
நிரம்பி ததும்பும் பரம்பிக்குளம் அணை பாசன விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : செப் 17, 2024 04:54 AM

பொள்ளாச்சி: பி.ஏ.பி., திட்டத்தின் பிரதான அணையான, பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவும் நிரம்பிய நிலையில் உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பரம்பிக்குளம் -- ஆழியாறு பாசன திட்டத்தில், பொள்ளாச்சி அருகே, டாப்சிலிப் பகுதியில், மொத்தம் 72 அடி உயர பரம்பிக்குளம் அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கான தண்ணீர், மழைக்காலங்களில் மலை முகடுகளில் இருந்தும், சோலையார் அணையில் இருந்தும் வந்தடைகிறது.
தொடர்ந்து நீர்வரத்து காரணமாக, கடந்த 5ம் தேதி, அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு, 3,600 கனஅடி நீர், மூன்று மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. பரம்பிக்குளத்தில் இருந்து துாணக்கடவு டனல் வழியாக, சர்க்கார்பதி நீர்மின் உற்பத்தி நிலையத்துக்கு, வினாடிக்கு, ஆயிரம் கனஅடி நீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நீர், மின் உற்பத்திக்கு பின், காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம், பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், வினாடிக்கு, 400 கனஅடி வீதம் உபரி நீர் மதகு வழியாக வெளியேற்றப்பட்டது.
நேற்று காலை நிலவரப்படி, பரம்பிக்குளம் அணையின் 72 அடி உயரத்தில், 71.58 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,487 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில், துாணக்கடவு டனல் வழியாக பாசனத்துக்கு ஆயிரம் கனஅடியும், மதகு வழியாக உபரியாக 487 கனஅடியும் நீர் வெளியேற்றப்பட்டது. பாசனத்துக்கு நீர் வழங்கும் நிலையிலும், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவில் உள்ளது. அணையில் தண்ணீர் ததும்புவதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.