/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரைகுறை வேலை: ஆறாக மாறுது சாலை! மழை நீர் வடிகால்களில் தொடரும் தடை
/
அரைகுறை வேலை: ஆறாக மாறுது சாலை! மழை நீர் வடிகால்களில் தொடரும் தடை
அரைகுறை வேலை: ஆறாக மாறுது சாலை! மழை நீர் வடிகால்களில் தொடரும் தடை
அரைகுறை வேலை: ஆறாக மாறுது சாலை! மழை நீர் வடிகால்களில் தொடரும் தடை
ADDED : ஜூலை 29, 2024 10:10 PM

கோவை:கோவை நகரில், மழைநீர் வடிகால்களில் தடைகளை அகற்றும் பணி, அரைகுறையாக நின்று விட்டதால், மழைக்காலங்களில் கட்டடங்களுக்குள் வெள்ளம் பாயும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில், இணைப்புப் பகுதிகளில், பாதாள சாக்கடைத் திட்டமே இல்லை. பழைய மாநகராட்சிப்பகுதி உட்பட பெரும்பாலான ரோடுகளில், மழைநீர் வடிகாலும் இல்லை. கடந்த சில ஆண்டுகளில், குடியிருப்பு மற்றும் கடைகள் உள்ள கட்டடங்களை விட, ரோடுகளின் உயரம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மழைக்காலங்களில் ரோட்டில் வரும் வெள்ளம், வீடுகளுக்குள் பாய்கிறது.
பழைய மாநகராட்சிப் பகுதிகளான ராம் நகர், காந்திபுரம், ரேஸ்கோர்ஸ், ஆர்.எஸ்.புரம் போன்ற பகுதிகளில், மழைநீர் வடிகால் இருந்தாலும் பெரும்பாலும் அவை ஆக்கிரமிப்பால் மூடப்பட்டுள்ளன. அல்லது குப்பைகள் மற்றும் மண்ணால் அடைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மழைக்காலங்களில் மழை வெள்ளம், கால்வாய்களில் பாயாமல் ரோட்டில் ஆறாக ஓடுவது வாடிக்கையாகவுள்ளது.
குடியிருப்பு, கடைகள் உள்ளிட்ட கட்டடங்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுவது ஒரு புறமிருக்க, நகருக்குள் பெய்யும் மழையின் வெள்ளம், குளங்களைச் சென்றடைவது தடைபடுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, இதுபற்றி நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. ராம் நகர் பகுதியில், மழைநீர் வடிகால் மீதான கான்கிரீட் கட்டமைப்பு, குப்பைகள் அடைப்பு பற்றி, அதில் விளக்கப்பட்டிருந்தது.
அந்த செய்தியின் எதிரொலியாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கள ஆய்வு செய்து, மழை நீர் வடிகால்களில் உள்ள தடைகளை அகற்றுவதற்கு உத்தரவிட்டார். அடுத்த இரண்டு நாட்களுக்கு, மழை நீர் வடிகால்களில் உள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றும் பணி வேகமாக நடந்தது. சில கான்கிரீட் தளங்களும் இடிக்கப்பட்டு, அடைப்புகளை நீக்கவும் வழி ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் இரண்டே நாட்களில் அந்தப் பணி அரைகுறையாக முடிக்கப்பட்டது. அதற்குப் பின், மாநகராட்சி ஊழியர்கள் அந்தப் பணியைத் தொடரவில்லை. பல இடங்களில் உள்ள கான்கிரீட் தளங்களையும், வடிகால்களில் உள்ள மண் மற்றும் குப்பைகளையும் அகற்றவில்லை. இதன் காரணமாக, அந்த கால்வாய்களில் மீண்டும் குப்பைகளைப் போடுவது அதிகரித்து, மழைநீர் போகும் பாதை அடைபட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும் முன்பே, இந்த மழை நீர் வடிகால்களை முற்றிலும் துார் வாரி, ஆங்காங்கே உள்ள கான்கிரீட் தடுப்புகளையும் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்யும்போது, சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடி, குடியிருப்புகளுக்குள் போகவும் வாய்ப்பு அதிகமுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் செய்வன திருந்தச் செய்வதுடன் சீக்கிரமாகவும் செய்வது அவசியம்!

