/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பார்த்தீனியம் களைகளை உரமாக மாற்றலாம்'
/
'பார்த்தீனியம் களைகளை உரமாக மாற்றலாம்'
ADDED : செப் 08, 2024 11:33 PM
பெ.நா.பாளையம்:பார்த்தீனியம் களைகளை மேலாண்மை முறையில் உரமாக மாற்றலாம் என, முன்னோடி விவசாயிகள் அறிவுரை கூறினர்.
பார்த்தீனியம் களைச்செடிகள் விதைகளின் வாயிலாக பரவுவதால், அந்தந்த பருவ காலங்களில் செடிகள் பூப்பதற்கு முன் வேருடன் களைய வேண்டும். இவை மனிதனுக்கு உடல் நல பிரச்னைகளை ஏற்படுத்துவதால், தகுந்த பாதுகாப்பு முறைகள் வாயிலாக அகற்ற வேண்டும். பார்த்தீனியம் அதிகமாக உள்ள விளை நிலங்களில், அதை விட வேகமாக வளரும் பயிர்களான சோளம், கம்பு, தக்கை பூண்டு போன்றவற்றை பயிரிடுவதன் வாயிலாக இதன் வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம்.
பார்த்தீனியம் செடிகள் பூப்பதற்கு முன் விளைநிலங்களில் நீரினை பாய்ச்சி, மடக்கி உழுவதன் வாயிலாக, இதை கட்டுப்படுத்துவதோடு, மண்ணுக்கும் உரமாக மாற்றிவிடலாம். பார்த்தீனிய செடி இயற்கை எதிரிகளான பூஞ்சாணங்கள், நுால் புழுக்கள், நத்தைகள் வாயிலாக எளிதில் கட்டுப்படுத்தலாம். குறிப்பாக, மெக்சிகன் பொறி வண்டுகளின் வாயிலாக இந்த களைச்செடிகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். பொறி வண்டு மற்றும் இதன் இளம் பருவ புழுக்கள் பார்த்தீனியம் செடிகளை விரும்பி உண்ணும் தன்மை கொண்டவை. சேகரிக்கப்பட்ட பார்த்தீனியம் செடிகளை சிறு துண்டுகளாக வெட்டி, அதன் மேல் சாண கரைசல் மற்றும் யூரியாவை தெளித்து பின்னர் அந்த குவியலை மண் கரைசல் கொண்டு மூடி விட வேண்டும். 50 முதல், 60 நாட்களில் மக்கிய உரங்கள் தயாராகி விடும் என, முன்னோடி விவசாயிகள் கூறினர்.