ADDED : ஜூன் 01, 2026 05:51 PM
கிணத்துக்கடவு: கடலூர் – கோவை பகல் நேர விரைவு ரயில் சேவையை துவங்க வேண்டும் என, ரயில் பயணியர் வலியுறுத்துகின்றனர்.
கடலூரில் இருந்து சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக கோவை வரை, பகல் நேர விரைவு ரயில் இயக்க, சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் கடந்த, 2024ம் ஆண்டு கருத்துரு தயார் செய்து தெற்கு ரயில்வே வாரியத்திற்கு அனுப்பப்பட்டது.
ஆனால், இதுவரை தெற்கு ரயில்வே சார்பில், இது சம்பந்தமாக எவ்வித அறிவிப்பும் இல்லாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த ரயிலை இயக்கினால் கடலூர் முதல் கோவை வரை, 8 எம்.பி., தொகுதிகள் இணைக்கப்படும்.
இதனால், வர்த்தகம், ஆன்மிகம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மக்களுக்கு உதவியாக இருக்கும். இதுமட்டுமின்றி, 2019 முதல் கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக திண்டுக்கல்லுக்கு ஒரு பகல் நேர ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, கடலூர் – கோவை பகல் நேர விரைவு ரயிலை இயக்கினால் ரயில் பயணியர்கள் மற்றும் மக்கள் பயனடைவர்.
மேலும், இதன் வாயிலாக ரயில்வே நிர்வாகத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். எனவே, இந்த ரயில் சேவையை விரைவில் துவங்க வேண்டும், என, ரயில் பயணியர் வலியுறுத்துகின்றனர்.
