/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டாஸ்மாக் கடையை மாற்றுங்க; மக்கள் கோரிக்கை
/
டாஸ்மாக் கடையை மாற்றுங்க; மக்கள் கோரிக்கை
ADDED : பிப் 24, 2025 12:33 AM
சூலுார்; சூலுார் பேரூராட்சிக்கு உட்பட்ட திருச்செந்தூர் முருகன் நகர், திருமகள் நகர் மற்றும் பகத்சிங் நகர் பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இந்து முன்னணி, அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், டாஸ்மாக் கடையை அகற்ற கோரி, பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.
வரும், 27ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, சூலுார் வந்த மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கலெக்டர் பவன் குமார் ஆகியோரை சந்தித்த அப்பகுதி மக்கள், 'தங்கள் பகுதியில் திறக்கப்பட்ட, டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்,' என, கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடையை வேறு இடத்துக்கு மாற்ற அமைச்சர் உறுதி அளித்தார். இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'கடையை அகற்ற கோரியுள்ளோம். எங்களுக்கு ஆதரவாக, அரசியல் கட்சியினர், அமைப்புகள் போராட்டத்தை அறிவித்தனர். இனி கடை திறக்கப்படுமா, வேறு இடத்துக்கு மாற்றப்படுமா என, வரும் நாட்களில் தெரியும்,' என்றனர்.