/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'இன்ஸ்பயர்' விருது போட்டி கோவையில் 39 பேர் தேர்வு
/
'இன்ஸ்பயர்' விருது போட்டி கோவையில் 39 பேர் தேர்வு
ADDED : பிப் 17, 2024 08:55 PM
கோவை:கோவை மாவட்டத்தில், கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட இன்ஸ்பயர் விருது போட்டியில் பங்கேற்க, 39 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.
தேசிய புத்தாக்க ஆய்வு நிறுவனத்துடன், பள்ளிக்கல்வித்துறை இணைந்து, மாணவர்கள் மத்தியில் ஒளிந்திருக்கும் படைப்புத்திறனை வெளிக்கொணர, இன்ஸ்பயர் விருது போட்டி, 2009 முதல் நடத்தப்படுகிறது.
இதில், அனைத்து வகை பள்ளி மாணவர்களும் பங்கேற்கலாம். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத, நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு, தீர்வு காணும் வகையில், படைப்புகளை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான செயல்திட்டம் மட்டும் தயாரித்து, ஆன்லைன் மூலம், பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிடும் போது, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சிறந்த செயல்திட்டத்தை தேர்வு செய்து, உரிய பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கு எண்ணில், 10 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு செலுத்துகிறது. இத்தொகையை கொண்டு, செயல்திட்டத்திற்கு வடிவம் கொடுக்க வேண்டும். மாவட்ட, மாநில, தேசிய அளவில் போட்டிகள் நடத்தி, சிறந்த படைப்பாளர்களுக்கு விருது வழங்கப்படும். கடந்தாண்டுக்கான இன்ஸ்பயர் விருது போட்டிக்கு, செயல்திட்டம் சமர்பித்தவர்களுக்கான ரிசல்ட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் 992 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில், 39 மாணவர்கள், இவ்விருது போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களின் வங்கி கணக்கில் விரைவில், படைப்பு உருவாக்கத்திற்கான தொகை செலுத்தப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.