/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்துக்கு கைகொடுத்த ரயில்வே கேட் மூடல் முன்னறிவிப்பு இல்லாததால் மக்கள் அவதி
/
போக்குவரத்துக்கு கைகொடுத்த ரயில்வே கேட் மூடல் முன்னறிவிப்பு இல்லாததால் மக்கள் அவதி
போக்குவரத்துக்கு கைகொடுத்த ரயில்வே கேட் மூடல் முன்னறிவிப்பு இல்லாததால் மக்கள் அவதி
போக்குவரத்துக்கு கைகொடுத்த ரயில்வே கேட் மூடல் முன்னறிவிப்பு இல்லாததால் மக்கள் அவதி
ADDED : ஜூலை 06, 2024 02:06 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, வடுகபாளையம் ரயில்வே கேட் நேற்று முதல் நிரந்தரமாக மூடப்பட்டது. முன்னறிவிப்பு இல்லாததால், வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
பொள்ளாச்சி நகராட்சி, வடுகபாளையம் செல்வகுமார் விஸ்தரிப்பு வீதியில், 100 ஆண்டுகளாக ரயில்வே கேட் செயல்படுகிறது. வடுகபாளையம் பகுதியில் வசிக்கும் மக்கள், இந்த ரயில்வே கேட் வழித்தடத்தை பயன்படுத்தி வந்தனர்.
மேலும், கோவை ரோட்டில் இருந்து வடுகபாளையம் செல்வோரும், சி.டி.சி., மேடு வழியாக ரயில்வே கேட்டை கடந்து செல்வது வழக்கமாக இருந்தது.
இந்த ரயில்வே கேட் மூடப்படுவதாக தகவல் பரவியதையடுத்து, கடந்தாண்டு ரயில்வே அதிகாரிகளிடம் அ.தி.மு.க., - பா.ஜ.,வினர் மனு கொடுத்து, ரயில்வே கேட்டை மூட வேண்டாம் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு வடுகபாளையம் ரயில்வே கேட் (எல்.சி., 123) மூடப்பட்டது. கேட் மூடும் பணிகள் துவங்கிய பின்னரே, இது குறித்த அறிவிப்பு ரயில்வே நிர்வாகம் வாயிலாக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.
அறிவிப்பில், 'பொள்ளாச்சி - கிணத்துக்கடவு ரயில்வே பாதையில் 'லெவல் கிராசிங் 123', (வடுகபாளையம் கேட்) காலை, 11:00 மணி முதல் மூடப்படும். அதற்கு மாற்று வழியாக வடுகபாளையம் கேட் - பி.கே.டி., பள்ளி ரோடு 'சப்வே' வழியாக செல்லலாம்.
இந்த வழித்தடத்தில், 3.3 மீ., மற்றும் அதற்கு மேல் உயரம் உள்ள வாகனங்கள் இவ்வழியாக செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. கனரக வாகனங்கள், பாலக்காடு ரோடு மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும். பொதுமக்கள் மாற்று வழித்தடத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்,' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மக்கள் ஏமாற்றம்
பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பு முன்னரே வெளியிடாததால், பலரும் ரயில்வே கேட் பகுதியாக செல்ல வந்தனர். அங்கு இருபுறமும் கயிறுகள் கட்டப்பட்டு, 'ஸ்டாப்' என போர்டு வைத்து ரயில்வே பணியாளர்கள் பணி செய்ததையும், அருகே கேட் மூடப்படுவதாக வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அங்குள்ளவர்களிடம், மாற்று வழித்தடம் கேட்டறிந்து பி.கே.டி., பள்ளி 'சப்வே' வழியாக சென்றனர்.
மேம்பாலம் கட்டணும்!
பொதுமக்கள் கூறியதாவது:
வடுகபாளையம் ரயில்வே கேட்டை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். கோவை ரோட்டில் இருந்து, வடுகபாளையம், பாலக்காடு ரோடுக்கு செல்ல இந்த வழித்தடம் பயனுள்ளதாக இருந்தது.
இவ்வழித்தடம் வழியாக, '108' ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள், 10 நிமிடங்களில் தேவையான மருத்துவமனைக்கு செல்ல முடியும். மேலும், பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் மினி பஸ்களும் இவ்வழியாக சென்றன.
பாலக்காடு ரோட்டில் இருந்த மற்றொரு வழித்தடம் மேம்பாலம் கட்டியதற்கு பின், அடைக்கப்பட்டு விட்டது. எனவே, இந்த ரயில்வே கேட்டையும் முழுமையாக அடைக்கும் போது, வடுகபாளையம் பகுதி தனித்தீவு போல மாறி விடும் என கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
தற்போது, அரை கி.மீ., துாரத்தில் உள்ள 'சப்வே' வழியாக செல்ல வேண்டும் என்பதால் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், வயதானோர் கடும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.
எனவே, வடுகபாளையம் ரயில்வே கேட் அருகே, மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
வசதியில்லை
மாற்று வழித்தடமான பி.கே.டி., பள்ளி அருகே உள்ள ரோடு குறுகலாக இருப்பதுடன், ரோடு மோசமாக உள்ளது. மேலும், பாலத்திலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை உள்ளது.
பாலத்தில் திரும்பும் பகுதி குறுகலாக இருப்பதால், நான்கு சக்கர வாகனம் எதிர் எதிரே செல்ல முடியாத சூழல் உள்ளது. போதிய தெருவிளக்கு வசதியும் இல்லாததால், மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, இங்கு போதிய வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.