ADDED : ஏப் 30, 2026 11:24 PM
intro
மூன்று நாட்களில் தேர்தல் முடிவு வெளியாகிறது. புதிய முதல்வரிடம் மக்கள் முதன்மையாக எதிர்பார்ப்பது என்ன? மக்கள் மனசு பகுதிக்காக இந்த கேள்வியை கொங்கு மண்டல மக்களிடம் நமது நிருபர்கள் கேட்டபோது கிடைத்த பதில்கள் அவர்களின் ஆதங்கத்தையும் எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் ஒருசேர வெளிப்படுத்தின. நான்காம் தேதிக்கு பின் முதல்வர் நாற்காலியில் அமரப்போவது எந்த தலைவராக இருந்தாலும் சரி, அவர் முன்னால் விசுவரூபம் எடுத்து நிற்கும் சவால் என்ன என்பதை இதை வாசித்தாலே புரியும்.
---------------–––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––
பாதுகாப்பு அரண்
கவர்மென்ட் ஆபீஸ்ல ஊழலே இல்லாத நிர்வாகத்தை கொண்டு வரணும். எல்லா டிபார்ட்மென்ட்லயும் என்ன நடக்குதுங்கறது மக்களுக்கு வெளிப்படையா தெரியணும். போலீஸ்காரங்க ஆளுங்கட்சியோட வேலைக்காரங்க மாதிரி இருக்கக்கூடாது; சட்டத்தை காப்பாத்தணும். விவசாயிகளை கருத்தா பாத்துக்கணும். ஸ்டூடன்ட்ஸ்தான் மத்தில போதை பழக்கத்தை ஒழிச்சு கட்டணும்.
விஜயன், திருப்பூர்
---
ஸ்பீட் ஆக்ஷன்
முதல்ல இந்த கவர்ன்மென்ட் ஆபீஸ்ல லஞ்சத்தை அடிச்சு ஒழிக்கணுங்க. எந்த வேலையா இருந்தாலும் ஒரு பைசா காசு செலவு வைக்காம மக்களுக்கு முடிச்சு தரணும். லஞ்சம் வாங்குற ஆபீஸர் எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் தயவு தாட்சண்யமே இல்லாம சீக்கிரமா விசாரிச்சு தண்டிக்கணும். அடுத்ததா போதை விவகாரம்... எல்லாரும் இதால சீரழியிறாங்க. அத தடுக்கணும்.
விக்னேஷ், அவிநாசி
---
விலை குறையுமா?
மெயினா லஞ்சம், ஊழலை ஒழிக்கணும். அதுலயே முக்கால்வாசி பிரச்னைகள் சரியாகிரும். அப்புறம் குடி, போதை புழக்கத்தை கம்ப்ளீட்டா தடுத்தாகணும். லேடீஸ் பாதுகாப்ப உறுதி செய்யணும். படிச்சவங்களுக்கு தகுந்த வேலையும் சம்பளமும் கொடுங்க; இலவசமா தர்ற எல்லாத்தையும் நிறுத்தினாலும் கோபப்பட மாட்டோம். விலைவாசி எக்கச்சக்கமா கூடிருச்சு. அதுக்கேத்தாப்ல வருமானம் உயரல.
பிரியா, திருப்பூர்
---
முழுமையா ஒழிக்கணும்
-அரசு அலுவலகங்கள்ல மட்டும் இருந்த லஞ்சம் தனியார் துறைக்கும் பரவிடுச்சு. தினமும் யாராவது நம்ம கிட்ட லஞ்சம் கேக்குறாங்க. கோபம் எகிறுது. ஆனா, எதுவும் செய்ய முடியல. லஞ்சத்தை முழுசா ஒழிக்காத வரைக்கும் அரசாங்கம் எத்தனை நல திட்டம் கொண்டு வந்தாலும் பிரயோசனம் இல்லை. இலவச திட்டங்களும் ஊழலுக்கு தான் உதவுது. கல்வியில் அரசியல் தலையீடு தடுக்கணும்.
ராமச்சந்திரன், பந்தலுார்
––
இலவசங்கள் வேண்டாம்
கட்சிக்காரர்களின் தலையீடு இல்லாமல், நேர்மையான முறையில் ஆட்சி நடத்த வேண்டும். ஓவர் கெடுபிடிகள் இல்லாமல் மக்களை சந்தித்து, பிரச்னைகளை கேட்டு அங்கேயே தீர்வு காண வேண்டும். இலவசங்களை படிப்படியாக குறைத்து, மக்கள் நேர்மையாக உழைத்து பிழைக்க வழிகள் ஏற்படுத்தி, நியாயமான ஊதியம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஊழலுக்கு முடிவு கட்ட வேண்டும்.
சங்கீதா, பந்தலுார்
––
புரோக்கர்கள் வேண்டாம்
அரசியல் லாபத்திற்காக, உலக வங்கியில் கடன் வாங்கி இலவச திட்டங்களை செயல்படுத்துவதை கைவிட வேண்டும். கல்வி, மருத்துவம் இரண்டு மட்டும் வசதி இல்லாத மக்களுக்கு இலவசமாக கொடுத்தால் போதும். நல திட்டங்களை செயல்படுத்துவதில் ஒவ்வொரு கட்டத்திலும் ‘அரசியல் புரோக்கர்கள்’ புகுந்து சுருட்டுகிறார்கள். எல்லாமே நேரடியாக வெளிப்படையாக நடக்க வேண்டும்.
ராஜேந்திரன், கூடலுார்
---
புதுசா வந்தா மாறலாம்
ரெண்டு கட்சிகளும் ஐம்பது வருஷமா மாறி மாறி ஆட்சி செய்றாங்க. பல நல்லது செஞ்சாலும் லஞ்ச ஊழல் மட்டும் தொடர்ந்து நடக்குது. ஊழலை ஒழிக்கணும்னா புதுசா யாராச்சும் வந்தாதான் முடியும்னு நம்ம மக்களுக்கு நல்லாவே தெரியும். வந்தா முதல் வேலையா லஞ்சத்துக்கு சமாதி கட்டணும். ஆனா அப்படி நடக்குமானு தெரியல, நாலாம் தேதி வரை காத்திருந்து பாக்கலாம்.
பால்ராஜ், காந்திபுரம்
எழுதாத உடன்படிக்கை
மாற்றி, மாற்றி ரெண்டு கட்சிகள் தான் ஆட்சிக்கு வராங்க. ஊழல் செஞ்சவங்கள ஜெயில்ல தள்ளுவோம்னு சொல்லி தான் ரெண்டு பேருமே ஓட்டு கேக்குறாங்க. ஆனா, ஊழல் செஞ்ச யாரும் இதுவரைக்கும் தண்டிக்கப்படல. அப்படின்னா என்ன அர்த்தம்? எழுதப்படாத ஒரு உடன்பாடு ரெண்டு பேருக்கும். அதனால்தான் லஞ்ச ஊழல் அதிகமாகிட்டே போகுது. இதுக்கு முடிவு கட்டணும்.
எஸ்.நாகூர் மீரான், ராம்நகர்
---
இலவச கல்வி, சிகிச்சை
ஏழை, நடுத்தர குடும்பங்கள் முன்னேறுவதற்கு பள்ளி முதல் உயர்கல்வி வரை இலவசமாக்க வேண்டும். மற்ற இலவசங்கள் தேவையே இல்லை. மருத்துவ சிகிச்சைகளையும் அனைவருக்கும் இலவசமாக்க வேண்டும். இந்த இரண்டுக்கும் தான் மக்கள் பெரும் தொகையை செலவிடுகிறார்கள். கடன் வாங்காமல் இது சாத்தியம் இல்லை. அந்த பொறுப்பை அரசு எடுத்துக் கொண்டால் மக்களுக்கு நிம்மதி கிடைக்கும்.
முருகேசன், சூலூர்
பெண்களுக்கு கைகொடுங்க
மகளிர் உரிமை தொகையை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாது. வேலை வாய்ப்பு, தொழில் எல்லாவற்றிலும் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். பெண்கள் தங்களின் சொந்தக் கால்களில் நிற்பதற்கு அரசு எந்த சிரமமும் இல்லாமல் அவர்களுக்கு உதவ வேண்டும். இதுவரை இரண்டு கட்சிகளும் வாக்குறுதிகளை தந்ததே தவிர, செயலில் சொதப்பல் தான்.
உமா, மதுக்கரை
---
நம்பர் 1 ஆக முடியும்
அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் முறையாக செயல்பட்டாலே போதும், தமிழகம் நம்பர் 1 மாநிலம் ஆக முடியும். இதற்கு இடையூறாக இருப்பது, அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் புரையோடி போயிருக்கும் லஞ்ச ஊழல் தான். அதை ஒழித்தால் தமிழகம் தானாக முன்னேறும். ஐந்தாண்டுக்கு ஒருமுறை மாறக்கூடிய அரசியல்வாதிகளை, அதிகாரிகள் அண்டி பிழைக்க கூடாது.
பூபதி, குளத்துப்பாளையம்
---
கடன் இல்லாத அரசு
மக்களுக்கான எந்தவொரு பணியும் இடைத்தரகர்கள் இன்றி நடக்க வேண்டும். அதுபோலவே அரசு நலத்திட்டங்களும். மக்கள் எதற்காகவும் காத்திருக்கும் நிலை கூடாது. மாநிலத்தின் கடன் 10 லட்சம் கோடியை கட்டி முடிப்பதற்கான செயல்திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். இதுவே அடுத்து வரும் முதல்வரின் முக்கியமான வேலை. மற்ற எல்லாம் காத்திருந்தால் பாதகம் இல்லை.
சுப்ரமணி, கணேசபுரம்
---
டாஸ்மாக்கை மூட வேண்டும்
பெண்கள் பாதுகாப்புக்கு தனி சட்டம் கொண்டு வர வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூடினால் மட்டுமே சட்டம் ஒழுங்கு சரியாகும். போதை கலாசாரம் ஒழியும். அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஊழல் அதிகாரிகளை மட்டுமல்ல, அதனால் பயன் அடைந்த அவர்களின் குடும்பத்தாரையும் ஜெயிலில் தள்ளி, அவருடைய பென்ஷனை ரத்து செய்ய வேண்டும்.
பசும்பொன் முத்து, ராமநாதபுரம்
---
ஊழலற்ற ஆட்சி தேவை
ஒவ்வொரு தேர்தலிலும் ஏதோ ஓர் நம்பிக்கையிலும் நப்பாசையிலும் தான் ஓட்டு போடுகிறோம். ஆனால், எந்த ஆட்சி வந்தாலும் லஞ்சமும் ஊழலும் ஒழிவதே இல்லை. இதனால், பல்வேறு நல திட்டங்களையும் தாண்டி இரு கட்சிகள் மீதும் வெறுப்பு வளர்ந்து விட்டது. புத்தம் புதிதாக யாராவது வந்தால் தான் ஊழலை ஒழிக்க முடியும் என்று நம்பி இம்முறை ஓட்டளித்தேன். ஊழலற்ற ஆட்சி நடத்தினால் போது, வேறு எதுவும் செய்ய தேவையில்லை.
– பி.வெங்கடாச்சலம், காந்திபுரம்
---
கீழிருந்து வர வேண்டும்
ஏற்கனவே தமிழகம் பலவிதங்களில் முன்னணி மாநிலமாகத்தான் உள்ளது. ஊழல் இல்லாத அரசு நடந்தால் நல்லது தான். ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை. அவர், இவர் என்றில்லை. எந்த தலைவர் வந்தாலும் ஊழலை ஒழிக்க முடியாது. ஏனென்றால் ஊழல் ஆரம்பிப்பதே மக்களிடம் இருந்து தான். லஞ்சத்தை கீழிருந்துதான் ஒழிக்க முடியும். மேலிருந்து அல்ல.
ராம், வேடபட்டி
வெளிப்படை நிர்வாகம்
ஊழல் இல்லாத நல்ல அரசாங்கம் வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஆனால், ஊழலை அரசு ஒழிக்க முடியாது. லஞ்சம் கொடுக்கறத மக்கள்தான் நிறுத்தணும். வேலை கொஞ்சம் லேட்டா நடக்கும், அவ்வளவுதானே. அரசியலுக்கு புதிதாக வந்தவர் முதல்வரானால், ஊழலை ஒழிக்க முயற்சி செய்து பார்க்கக்கூடும். அரசாங்க டெண்டர் மாதிரியான எல்லா விஷயமும் வெளிப்படையா இருக்கணும். அது முடியுமா?
கார்த்திகேயன், சாய்பாபா காலனி
---
லஞ்சத்துக்கு வேட்டு வை
ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வி, வேலை வாய்ப்பு அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும். போதை பொருள் புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது, வயது வித்தியாசம் இன்றி நடக்கும் பாலியல் பலாத்காரத்துக்கு முடிவு கட்ட வேண்டும். இவற்றை கடந்து அரசு அலுவலகங்களில் லஞ்சம் அறவே ஒழிய வேண்டும். சாதாரண மக்கள் அரசு தொடர்பான வேலைகளை செலவின்றி முடிக்க வழி செய்ய வேண்டும்.
சுபாஷினி, நரசிம்மநாயக்கன்பாளையம்
-மதுவிலக்கு அமலாகட்டும்
மது விலக்கை கட்டாயம் கொண்டுவர வேண்டும். இல்லை என்றால் அடியோடு சீரழிவுதான். அதோடு, கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனையை அடியோடு ஒழிக்க வேண்டும். போதை பழக்கம் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறினால், குடும்பங்களில் சேமிப்பு அதிகரிக்கும். இளைஞர்கள் தொழிலதிபராக, விஞ்ஞானிகளாக, மருத்துவர்களாக என இப்படி பல்வேறு துறைகளிலும் ஜெயிப்பாங்க.
கீதா, காரமடை
