/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் ரத உற்சவம் கோலாகலம்
/
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் ரத உற்சவம் கோலாகலம்
UPDATED : மார் 22, 2024 12:14 PM
ADDED : மார் 22, 2024 12:14 AM

தொண்டாமுத்துார்:பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழாவையொட்டி, ரத உற்சவம் கோலாகலமாக நடந்தது.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு, பங்குனி உத்திர தேர்த்திருவிழா, கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை, யாகசாலை பூஜை மற்றும் சுவாமி புறப்பாடு நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை, திருக்கல்யாண உற்சவம், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, வெள்ளையானை சேவை, அதிமூர்க்கம்மன் தேரோட்டம் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் நேற்று நடந்தது.
பேரூர் கோவிலில் கும்பாபிஷேக பாலாலயம் செய்யப்பட்டு, கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், சுவாமி, கோவிலை விட்டு வரக்கூடாது. இதனால், பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா, கோவிலின் உட்பிரகாரத்திலேயே நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. காலை 9:00 மணி முதல் 9:45 மணிக்குள், பஞ்ச மூர்த்திகள் ரத ஜோடனை செய்யப்பட்டு, ரதத்தில் ரதா ரோகம் நடந்தது.
மாலை 5:00 மணிக்கு கோவிலின் உட்பிரகாரத்தில், தேர் போல அலங்கரிக்கப்பட்ட ரதம் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர், ரத உற்சவத்தை துவக்கி வைத்தனர்.
விநாயகர், சண்டிகேஸ்வரர், பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன், சுப்பிரமணியர் ஆகியோரின் ரதங்களை, பேரூரா... பட்டீசா... என்ற கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். இன்றிரவு வேடுபரி உற்சவம், நாளை இரவு, தெப்பத்திருவிழா நடக்கின்றன.

