/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலக்காடு ரோடு சென்டர் மீடியனில் செடிகள் வாகன ஓட்டுநர்கள் வரவேற்பு
/
பாலக்காடு ரோடு சென்டர் மீடியனில் செடிகள் வாகன ஓட்டுநர்கள் வரவேற்பு
பாலக்காடு ரோடு சென்டர் மீடியனில் செடிகள் வாகன ஓட்டுநர்கள் வரவேற்பு
பாலக்காடு ரோடு சென்டர் மீடியனில் செடிகள் வாகன ஓட்டுநர்கள் வரவேற்பு
ADDED : ஆக 09, 2024 02:56 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், சென்டர் மீடியனில் வளர்க்கப்படும் மரங்கள், செடிகளால், பசுமை சாலை போன்று மாறியுள்ளது. இதே போன்று மற்ற பகுதியில் உள்ள ரோடுகளை அழகுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சியில் ரோட்டோரங்களில், வளர்ந்து நிற்கும் மரங்கள், பசுமை குகை பாதை போன்று காட்சியளிக்கும். ஆனால், இன்று ரோட்டோரத்தில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு, பசுமை இழந்து, பொட்டல் காடு போல மாறியுள்ளன.
பொள்ளாச்சி - கோவை ரோடு, பொள்ளாச்சி - உடுமலை ரோடு என பல இடங்களிலும் விரிவாக்கம் என்ற பெயரில், இருந்த மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டன. அதற்கேற்ப மரங்கள் வளர்க்கப்படாததால், வாகன ஓட்டுநர்கள் நிழலுக்காக ஒதுங்கி நிற்கக்கூட நிழல் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு விரிவாக்கம் செய்வதற்காக, அங்கு இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. பணிகள் முடிந்ததும் ரோடு பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர், தன்னார்வலர் வாயிலாக ராமபட்டிணம் - கோபாலபுரம் வரை சென்டர் மீடியனில் மரங்கள், பூச்செடிகள் வளர்க்க நடவடிக்கை எடுத்துள்ளார். அது தவிர, 30 அடிக்கு ஒரு மரங்களும் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன.
ராமபட்டிணம் ரவுண்டானா முழுவதும் பூச்செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள், செடிகளின் அருகே நின்று ரசிப்பதுடன், போட்டோ எடுத்துச் செல்கின்றனர்.
மரங்களை பராமரிக்கும் தன்னார்வலர் கூறுகையில், 'வறட்சியை தாங்க கூடிய செடிகள் வைக்கப்பட்டுள்ளன. பறவைகள் இவற்றில் கூடு கட்டி வாழும். இன்னும் சில ஆண்டுகளில் இந்த ரோடு பசுமை சாலை போல மாறிவிடும்,' என்றார்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி பகுதியில் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்ட சாலைகள், 'பொட்டல் காடு' போல மாறியுள்ளன. பொள்ளாச்சி நகரில் அமைக்கப்பட்ட ரவுண்டானாக்கள் போதிய பராமரிப்பின்றி உள்ளன.
ரவுண்டானாக்கள் அமைக்கும் போது, அங்கு பொள்ளாச்சியின் அடையாளங்கள் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்பின் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.
அதே நேரத்தில், ராமபட்டிணம் - கோபாலபுரம் வரை ரோட்டில் உள்ள சென்டர் மீடியன்கள் செடிகளால் அழகாய் மாறியுள்ளன. இதுபோன்று தன்னார்வலர்கள் உதவியுடன், இங்குள்ள ரவுண்டானாக்கள், விரிவாக்கம் செய்யப்பட்ட ரோடுகளை பராமரித்தால், அனைத்தும் பசுமையாக காட்சியளிக்கும்.
இவ்வாறு, கூறினர்.