/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தயவு செய்து எங்களையும் கொஞ்சம் பாருங்களேன்
/
தயவு செய்து எங்களையும் கொஞ்சம் பாருங்களேன்
ADDED : ஏப் 10, 2024 11:28 PM
'மூ ன்றாவது கட்டமாக நடத்தப்படும் பயிற்சி வகுப்பிலாவது, எங்களுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்' என, ஓட்டுச்சாவடியில் பணியமர்த்தப்பட உள்ள அலுவலர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மற்றும் கல்லுாரிகளில் பணிபுரியும் பேராசிரியர் உட்பட ஊழியர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தல் நாளன்று, ஓட்டுச்சாவடியில், திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் படி, வாக்காளர் பெயர், அடையாளங்கள் சரியாக இருக்கிறதா, வாக்காளர்களுக்கு கையில் மை வைப்பது, ஓட்டுப்பதிவு முடிந்து ஓட்டுப்பெட்டிக்கு 'சீல்' வைத்து மையத்துக்கு கொண்டு செல்வது என, முக்கியத்துவம் வாய்ந்த பணியில் ஈடுபடுத்தப்படும் அலுவலர்களுக்கு, கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில், இரு கட்டங்களாக நடந்த பயிற்சி வகுப்பின் போது, தண்ணீர், உணவு உட்பட அத்தியாவசிய வசதிகள் நிறைவேற்றித் தரவில்லை என, இப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் கூட, கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் நடந்த இரண்டாவது கட்ட பயிற்சி வகுப்பில், மத்திய உணவு கிடைக்காமல், பயிற்சியில் ஈடுபட்டோர் அதிருப்தியடைந்தனர்.
மூன்றாவது கட்டமாக, வரும் 16ம் தேதி, சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பயிற்சி வகுப்பிலாவது, குடிநீர், தரமான உணவு உட்பட அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றி தர வேண்டும் என்பது தான் இவர்களின் பெரிய எதிர்பார்ப்பு.
இதுகுறித்து, பயிற்சி வகுப்பில் பங்கேற்ற சிலர் கூறியதாவது:
இரண்டு பயிற்சி வகுப்பில், பல இடங்களில் போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. வெளியில் சென்று உணவு வாங்கி வரலாம் என்றால், நீண்ட துாரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே, வரும் மூன்றாவது கட்ட பயிற்சியிலாவது, எங்களுக்கான உணவு, குடிநீர் தேவைகளை முறையாக நிறைவேற்ற வேண்டும். மேலும், எங்களுக்கு ஒதுக்கப்படும் ஓட்டுச்சாவடிக்கு, ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள் செல்லும் போதும், ஓட்டுப்பதிவு நாளன்றும், உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை, மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

