துாக்கிட்டு வாலிபர் தற்கொலை
ஆனைமலையை சேர்ந்த ஹரிஹரசுதன்,24; சென்டரிங் பணி செய்து வந்தார். இவர் கடந்த, ஆறு ஆண்டுகளாக குடிப்பழக்கம் உள்ளதாகவும், போதைக்கு அடிமையானதாகவும் தெரிகிறது.கடந்த, 15ம் தேதி காலை வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த ஹரிஹரசுதனுக்கு அவரது நண்பர்கள் போன் செய்த போது, அவர் எடுக்கவில்லை.
இதையடுத்து, வீட்டுக்கு சென்று நண்பர்கள் பார்த்த போது, ஹரிஹரசுதன் துாக்கில் தொங்கியவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி, நேற்றுமுன்தினம் அவர் இறந்தார். இதுகுறித்து, ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விவசாயிகளிடம் கள் பறிமுதல்
ஆனைமலை அருகே வாழைக்கொம்பு பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது, கள் விற்பனைக்காக வைத்து இருந்த அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை,56, என்பவரை போலீசார் கைது செய்து, ஏழு லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.
இதுபோன்று வேட்டைக்காரன்புதுார் தோட்டத்தில் கள் விற்பனைக்காக வைத்து இருந்த ஆறு லிட்டர் கள்ளை பறிமுதல் செய்து, அதே பகுதியை சேர்ந்த விவசாயி பாலசுப்ரமணியன்,54, என்பவரை கைது செய்தனர்.
விவசாயிகள் கூறுகையில், 'ஆனைமலை சுற்றுப்பகுதியில், தேங்காய்க்கு விலை இல்லாத நிலையில், விவசாயிகள் சிலர் கள் இறக்கி விற்பனை செய்கின்றனர். தற்போது, போலீசார் கள் இறக்கும் விவசாயிகளை கைது செய்வது கண்டிக்கத்தக்கது,' என்றனர்.
இளம்பெண் தற்கொலை
கிணத்துக்கடவு, தேவராயபுரத்தை சேர்ந்தவர் புஷ்பா, 24. இவர், பிளஸ் 2 முடித்து வீட்டிலேயே இருந்து வந்தார். திருமணம் ஆகவில்லை.
நேற்று முன் தினம் பெற்றோர்கள் வேலைக்கு சென்றிருந்தனர். அப்போது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வேலை முடித்து வீட்டிற்கு வந்த பெற்றோர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், புஷ்பாவின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.