கூட்டுறவு சங்க அலுவலகத்தில் திருட்டு
மடத்துக்குளம், பெருமாள்புதுார் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி வருபவர் சித்ரா. கடந்த மாதம், 22ம் தேதி, சங்க பீரோவில், ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள நகை ஆகியவற்றை வைத்து சென்றுள்ளார்.
உள்ளே நுழைந்த திருடர்கள் பீரோவை உடைத்து, நகை, பணத்தை திருடிச்சென்றனர். இது குறித்து, குமரலிங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆனைமலை நரசிம்மன் நகரைச்சேர்ந்த மணிகண்டன், 24, கவுதம், 22, ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பணம், நகை மீட்கப்பட்டது.
205 கிலோ குட்கா பறிமுதல்
உடுமலை சிக்கந்தர்பாட்சா வீதியில், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 250 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில், உடுமலையை சேர்ந்த மனோஜ்குமார், 26, பழநி, புது ஆயக்குடியைச்சேர்ந்த மைதான்பாட்சா, 33, ஆகியோர் ஈடுபட்டிருந்தது தெரிந்தது. மனோஜ்குமாரை கைது செய்த போலீசார், மற்றொருவரை தேடி வருகின்றனர்.
கஞ்சா விற்ற டிரைவர் கைது
பொள்ளாச்சி அருகே, மாக்கினாம்பட்டியில் கிழக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், பொள்ளாச்சி நேருநகரை சேர்ந்த சேக் பரீத்,23, என்றும், கஞ்சா விற்பனைக்காக வைத்து இருப்பதும் தெரியவந்தது. இவர், ஆட்டோவில் கஞ்சா பதுக்கி வைத்து, ஒவ்வொரு பகுதிக்கும் சென்று விற்பதும் தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், இரண்டு கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.