புகையிலை விற்றவர் கைது
கிணத்துக்கடவு, தாமரைகுளத்தை சேர்ந்தவர் கண்ணாராம், 38, மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடையில் புகையிலை பொருட்கள் விற்பதாக, கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், மளிகை கடையில் சோதனை செய்தனர். இதில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, கண்ணாராமை கைது செய்தனர்.
வாகன விபத்தில் மூவர் காயம்
கோவை, ஆலந்துறையைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 40. இவர், இருசக்கர வாகனத்தில், மனைவி மஞ்சு, 39, மகள் ஏஞ்சல், 6, ஆகியோருடன் பொள்ளாச்சி நோக்கி பைக்கில் சென்றனர். பைக்கை மஞ்சு ஓட்டினார். முள்ளுப்பாடி பாலத்தின் அருகே சென்ற போது, எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் பால் கேன்களுடன் வந்த பைக், மஞ்சு ஓட்டி வந்த பைக்கின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தில், மோகன்ராஜ், மஞ்சு, ஏஞ்சல் மூவரும் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத பைக் ஓட்டுநர் மீது, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

