விபத்தில் ஒருவர் பலி
பொள்ளாச்சி அருகே டி.கோட்டாம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன், 49. இவர் டைல்ஸ் வேலை செய்து வந்தார். நேற்றுமுன்தினம் வேலை முடித்து, இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் விஜயபுரம் ரோட்டரி கிளப் அருகே சென்று, வலது பக்கம் திரும்ப வாகனத்தை திருப்பியுள்ளார்.
அப்போது, அதே ரோட்டில் அவருக்கு பின்னால் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வந்த பைக், மோதியது. அதில், லட்சுமணன் பலத்த காயமடைந்தார்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு லட்சுமணனைஅழைத்துச் செல்லும் வழியில் இறந்தார். பைக்கில் வந்து காயமடைந்த உடுமலையைச்சேர்ந்த ஜேசுராஜ், 28, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மகாலிங்கபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
விஜயபுரம் அருகே அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக கூறி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட வந்தனர். இதையடுத்து, போலீசார் பேச்சு நடத்தி விபத்தை தடுக்க பேரிகார்டு வைக்கலாம் எனக்கூறினர். இதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர்.
ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி
பொள்ளாச்சி தொப்பம்பட்டியைச்சேர்ந்த பார்வதி, 50, மரகதம், 38 ஆகியோர் பழைய இரும்பு பொறுக்கும் வேலை செய்து வந்தனர்.நேற்றுமுன்தினம் ஓம்பிரகாஷ் தியேட்டர் அருகே உள்ள பழைய இரும்புக்கடையில் இரும்புகளை கொடுத்து விட்டு, வீட்டுக்கு ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர்.
பொள்ளாச்சி - பல்லடம் ரோடு மகாலிங்கபுரம் ஐந்துமுனை சந்திப்பில் இருந்து, காளான் வாங்க வேண்டி, மகாலிங்கபுரம் ரவுண்டானா ரோட்டில் செல்லும் போது, ஆட்டோவை ஓட்டிச்சென்ற பொள்ளாச்சி சேரன் நகரைச்சேர்ந்த பவுன்ராஜ், 46, அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டியதால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஆட்டோ கவிழ்ந்தது. அதில், பலத்த காயமடைந்த பார்வதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். காயமடைந்த மரகதம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மகாலிங்கபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஒப்பந்ததாரர் தற்கொலை: ஒருவர் கைது
கோட்டூர் அருகே கெங்கம்பாளையத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் சக்திகுமார்,45. இவர், மனைவி மகன், மகளுடன் வசித்து வந்தார்.
இவரிடம் பணம் வாங்கியவர்கள் பணம் தர மறுத்ததால், சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு உறவினர்களுக்கு அனுப்பி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த கோட்டூர் போலீசார், சமத்துாரைச்சேர்ந்த கணேசமூர்த்தியை கைது செய்தனர்.
கோட்டூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட கிராம பொதுமக்கள், கருப்பம்பாளையத்தை சேர்ந்த சாதிக் பாஷா, ஆவல் சின்னாம்பாளையத்தைச்சேர்ந்த செந்தில்நாதன் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது, பொதுமக்கள் அவர்களை கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனக்கூறி கலைந்து சென்றனர்.