750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார், பொள்ளாச்சி - ஊத்துக்காடு ரோடு பி.கே.எஸ்., காலனி அருகே ரோந்து சென்றனர்.அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்ற மினி லாரியை சோதனை செய்த போது, 750 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது.
மினி லாரியை ஓட்டி வந்த பொள்ளாச்சி கண்ணப்பன் நகரை சேர்ந்த பிரதீப்,24, அவருக்கு உதவியாக வந்த சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த முத்துசரவணன்,28, ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், ஜோதிநகர் மற்றும் சுற்றுப்பகுதியில் ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி, கண்ணப்பன் நகரை சேர்ந்த அமான் என்கிற அமானுல்லா வாயிலாக, கேரளாவில் உள்ள மளிகை கடைகளுக்கு கள்ள சந்தையில் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையைடுத்து, 750 கிலோ ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள அமானுல்லாவை போலீசார் தேடி வருகின்றனர்.
தேடப்பட்டவர் கோர்ட்டில் சரண்
கோட்டூர் அருகே, கெங்கம்பாளையத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் சக்திகுமார்,45. இவர், மனைவி மகன், மகளுடன் வசித்து வந்தார். இவரிடம் பணம் வாங்கியவர்கள் பணம் தர மறுத்ததால் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு உறவினர்களுக்கு அனுப்பி, தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கோட்டூர் போலீசார், சமத்துாரை சேர்ந்த கணேசமூர்த்தியை கைது செய்தனர்.
இந்நிலையில், தேடப்பட்டு வந்த ஆவல்சின்னாம்பாளையத்தை சேர்ந்த செந்தில்நாதன்,55 என்பவர், பொள்ளாச்சி ஜே.எம்.எண் - 1 கோர்ட்டில் ஆஜரானார். இதையடுத்து, போலீசார் அவரை கிளைச்சிறையில் அடைத்தனர்.