/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்று சாயப்பட்டறைகளை மூட மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் உத்தரவு
/
மூன்று சாயப்பட்டறைகளை மூட மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் உத்தரவு
மூன்று சாயப்பட்டறைகளை மூட மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் உத்தரவு
மூன்று சாயப்பட்டறைகளை மூட மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் உத்தரவு
ADDED : பிப் 25, 2025 10:17 PM

மேட்டுப்பாளையம்,; பவானி ஆற்றில் சாயப்பட்டறை கழிவுநீர் கலந்து, தண்ணீர் மாசு அடைந்ததை அடுத்து, சிறுமுகை அருகே இயங்கி வந்த, மூன்று சாயப்பட்டறைகளை மூட, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம் வழியாக ஓடும் பவானி ஆற்றில் இருந்து, 17 குடிநீர் திட்டங்களுக்கு, தண்ணீர் எடுக்கப்படுகிறது. சிறுமுகையிலும், பெள்ளேபாளையம் ஊராட்சியில் உள்ள சாயப்பட்டறைகள் கழிவு நீரை சுத்தம் செய்யாமல், வெளியேற்றி, பவானி ஆற்றுக்கு சென்றது.
சிறுமுகை ராமர் கோவிலில் இருந்து, ஜடையம்பாளையம் ஊராட்சி ஆலாங்கொம்பு பழையூர் வரை, பவானி ஆற்றில் தண்ணீர் கருப்பு நிறமாக மாறியது.
இந்நிலையில், திருப்பூர் மாசுக்கட்டுப்பாடு வாரிய பறக்கும் படை சுற்றுச்சூழல் பொறியாளர் லாவண்யா தலைமையில், உதவி பொறியாளர் கதிர்வேல், கோவை வடக்கு மாசு கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர் சிபின் சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு செய்தது. இந்த குழுவினருடன் கோவை மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செல்வக்குமார், உதவி பொறியாளர் அன்பரசன், ராஜேஷ் மற்றும் பவானி சாகர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பூங்காவனம் சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், சுகாதார ஆய்வாளர், ஜடையம்பாளையம், பெள்ளேபாளையம் ஆகிய ஊராட்சிகளின் செயலர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் உடன் இருந்தனர்.
இக்குழுவினர் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை, பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம், ஆலாங்கொம்பு பழையூர், குத்தாரிபாளையம், எலகம்பாளையம், பெள்ளேபாளையம் எஸ்.ஆர்.எஸ். நகர், மூலத்துறை, சிறுமுகை பேரூராட்சி ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தனர். பின்பு பவானி ஆற்றில் மாசடைந்த தண்ணீரை, ஆய்வுக்கு எடுத்தனர்.
இந்த ஆய்வில் பெள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட எஸ்.ஆர்.எஸ். நகரில் இயங்கி வந்த மூன்று சாயப்பட்டறைகள் கண்டறியப்பட்டன. அவற்றை மூடுவதற்கு மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

