/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பொங்குது' பாதாள சாக்கடை கழிவு நீர்! சாக்கடை அடைப்பை நீக்க 16 வண்டிகள் இருக்குதாம்
/
'பொங்குது' பாதாள சாக்கடை கழிவு நீர்! சாக்கடை அடைப்பை நீக்க 16 வண்டிகள் இருக்குதாம்
'பொங்குது' பாதாள சாக்கடை கழிவு நீர்! சாக்கடை அடைப்பை நீக்க 16 வண்டிகள் இருக்குதாம்
'பொங்குது' பாதாள சாக்கடை கழிவு நீர்! சாக்கடை அடைப்பை நீக்க 16 வண்டிகள் இருக்குதாம்
ADDED : செப் 02, 2024 10:53 PM
கோவை:கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்க, போதுமான வாகனங்கள் இருக்கின்றன. அவற்றை சரியாக மேலாண்மை செய்யாத காரணத்தால், வீதிகளிலும், வீடுகளுக்குள்ளும் கழிவு நீர் பொங்கி வழியும் பிரச்னை, விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
கோவை பழைய மாநகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டு, 40 - 45 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.
தற்போது குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், லாட்ஜ்கள் பெருகி விட்டதால், கழிவு நீர் வெளியேற்றம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக, அழுத்தம் தாங்காமல் குழாயில் உடைப்பு ஏற்படுகிறது அல்லது, 'மேனுவல்' பகுதியில் கழிவு நீர் பொங்குகிறது.
இன்னும் சில இடங்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் 'ரிவர்ஸ்' ஆகி, தாழ்வான பகுதிகளாக இருக்கும் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது.
பாதாள சாக்கடை கழிவு நீர் என்பதால், துர்நாற்றம் படுமோசமாக இருக்கிறது. பொதுமக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுதொடர்பாக, மாநகராட்சி நிர்வாகத்துக்கும், கவுன்சிலர்களுக்கும் தகவல் கொடுத்தால், கழிவு நீர் அடைப்பு நீக்கும் வாகனம் உடனடியாக அனுப்புவதில்லை.
அதிகாரிகளை கவுன்சிலர்கள் தொடர்பு கொண்டு கேட்டால், 'வாகனம் பழுதாகி இருக்கிறது; வேறு மண்டலத்தில் கேட்டிருக்கிறோம்' என, மழுப்பலாக பதில் அளிக்கின்றனர்.
உயரதிகாரிகள் வரை பிரச்னையை கொண்டு சென்றால் மட்டுமே, பாதாள சாக்கடை அடைப்பை நீக்குவதற்கு, வாகனம் அனுப்புகின்றனர். இல்லையெனில், பொது சுகாதாரப் பிரச்னை எழும் வரை மாநகராட்சி பொறியியல் பிரிவினர், அலட்சியமாக விட்டு விடுகின்றனர்.
இதுகுறித்து மண்டல கூட்டங்களில் கவுன்சிலர்கள் கூறினாலும், அப்போதைக்கு சாக்குபோக்கு காரணங்களை கூறி, அதிகாரிகள் நழுவி விடுகின்றனர்.
இதுதொடர்பாக விசாரித்தபோது, கோவை மாநகராட்சி வசம் மழைக்காலத்தில் தண்ணீரை உறிஞ்சு எடுப்பதற்கு, 9 'சல்லேஜ்' வாகனங்கள், பாதாள சாக்கடை அடைப்பு நீக்க, சிறியது - 9, பெரியது - 7 என, 16 வாகனங்கள் இருக்கின்றன.
பிளாஸ்டிக், மண், துணி, கல் அடைப்பு என எதுவாக இருந்தாலும், எடுக்கக் கூடிய 'ரிசைக்கிளர்' என்கிற வாகனம், தேவை அடிப்படையில் வாடகைக்கு தருவிக்கப்படுகிறது; சமீபத்தில் திருப்பூரில் இருந்து வாடகைக்கு கொண்டு வந்து இயக்கப்பட்டது.
மாநகராட்சி பொறியியல் பிரிவினரிடம் கேட்டபோது, 'பாதாள சாக்கடை குழாயில் கழிவு நீர் மட்டும் வருவதில்லை. 'நாப்கின்', துணி உள்ளிட்ட பொருட்களையும் போட்டு விடுகின்றனர். புதிய குழாயாக இருந்தால், தண்ணீரோடு அடித்துச் சென்று விடுகிறது.
பழைய குழாய்களில் தேங்கி, அடைப்பு ஏற்படுகிறது. பழைய குழாய் என்பதால் அரிப்பு ஏற்பட்டு, மண் தேங்குகிறது. பல இடங்களில் வீடுகளுக்கு வழங்கியுள்ள இணைப்பு, 10 ஆண்டுகளுக்கு முன் பதித்த குழாயாக உள்ளது. அவற்றை புதுப்பிக்காமல் இருப்பதால், அடைப்புகள் ஏற்படுகின்றன' என்றனர்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''பழைய மாநகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை குழாய் பதித்து, 40-45 ஆண்டுகளாகி விட்டது. அவற்றை மாற்றுவதற்கு சர்வே எடுத்து வருகிறோம். திட்ட மதிப்பீடு தயாரித்து அறிக்கை அனுப்பினால், நிதி ஒதுக்குவதாக அரசு கூறியுள்ளது. மாநகராட்சி வசம் 16 வாகனங்கள் இருக்கின்றன. தேவைப்பட்டால், வாடகை வாகனங்கள் தருவிக்கப்படுகின்றன,'' என்றார்.