/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகளிருக்கு பயன்தருமா பூமாலை வணிக வளாகம்! திறக்கப்படாத கடைகளால் தொடரும் வருவாய் இழப்பு
/
மகளிருக்கு பயன்தருமா பூமாலை வணிக வளாகம்! திறக்கப்படாத கடைகளால் தொடரும் வருவாய் இழப்பு
மகளிருக்கு பயன்தருமா பூமாலை வணிக வளாகம்! திறக்கப்படாத கடைகளால் தொடரும் வருவாய் இழப்பு
மகளிருக்கு பயன்தருமா பூமாலை வணிக வளாகம்! திறக்கப்படாத கடைகளால் தொடரும் வருவாய் இழப்பு
ADDED : செப் 15, 2024 11:56 PM
கோவை : கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள பூமாலை வணிக வளாகத்தில் பெரும்பாலான கடைகள் பயன்படுத்தப்படாமலும், கொடுக்கப்பட்ட கடைகள் திறக்கப்படாமலும் இருப்பதால் வருவாய் இழப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மத்திய அரசு உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில், கடந்த, 2002ம் ஆண்டு, எஸ்.ஜி.எஸ்.ஒய்., என்ற திட்டத்தின் கீழ் பூமாலை வணிக வளாகம் கட்டப்பட்டது. முதல் தளத்தில், 22 கடைகளும், மேல் தளத்தில் ஆலோசனை அரங்கும் உள்ளது.
ஆரம்ப காலத்தில், மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு பயிற்சி அளிக்கவும், அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்தவும் இம்மையம் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் தலையீடு காரணமாக, இம்மையம் செயல்படாமல் மூடப்பட்டு இருந்தது. மாவட்ட மகளிர் திட்டத்தின் கட்டுப்பாட்டில் இம்மையம் உள்ளது.
இந்நிலையில், 2021 கலெக்டர் சமீரன் பணியாற்றியபோது, சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த தொழில்முனைவோர் சிலரை தேர்வு செய்து கடைகள் ஒதுக்கப்பட்டது. மேலும், ஞாயிற்று கிழமைகளில் மதி சந்தை என்ற பெயரில் விற்பனை கண்காட்சியும் தொடர்ந்து நடத்தப்பட்டது.
ஆனால், தற்போது இம்மையம் மீண்டும் பெரிதளவில் செயல்பாடுகள் இன்றியும், யாருக்கும் பயன் இல்லாமலும் உள்ளன. மொத்தமுள்ள 22 கடைகளில், 9 கடைகள் மட்டுமே வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதிலும், மூன்று கடைகள் மட்டுமே தினந்தோறும் செயல்படுவதை காணமுடிகிறது. பல மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்த இடமின்றி உள்ள சூழலில் உரிய வாய்ப்புகளை வழங்காமல், பூட்டி வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, மகளிர் சுய உதவிக்குழு பெண் ஒருவர் கூறுகையில்,' இதுபோன்று கடை கிடைக்காதா என , பலர் ஏங்குகின்றோம். ஆனால், இங்கு கடைகள் பயன்பாடு இன்றி மூடப்பட்டுள்ளது. நாங்கள் விண்ணப்பித்து பல ஆண்டுகளே கடந்துவிட்டது. கடை வழங்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் திறப்பது கூட கிடையாது. தகுதியானவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கவேண்டும்,' என்றார்.
மாவட்ட மகளிர் திட்ட அதிகாரி சந்திரா கூறுகையில்,'' ஒன்பது கடைகளுக்கு அனுமதி கொடுத்துள்ளோம். மீதமுள்ள கடைகளுக்கு விண்ணப்பங்கள் பெற்று வருகிறோம். ஒரு சிலர் கடைகளை வாங்கி, அடுத்த மாதம் மூடிவிடுகின்றனர். பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலித்து கடைகள் வழங்கும் பணிகள் நடக்கின்றன,'' என்றார்.
வருவாய் இழப்பு
வணிக வளாகத்தில், 10க்கு 10 , 10க்கு 8 என்ற அளவுகளில் கடைகள், 6000, 5000, 4500 ரூபாய்க்கு வாடகைக்கு விடப்படுகிறது. இதன் படி சராசரியாக கணக்கிட்டால், சுமார் 88000 ரூபாய் மாதத்திற்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.