/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலம்புழாவில் மின் உற்பத்தி சோதனை ஓட்டம் வெற்றி
/
மலம்புழாவில் மின் உற்பத்தி சோதனை ஓட்டம் வெற்றி
ADDED : ஆக 06, 2024 05:49 AM
பாலக்காடு: மலம்புழா அணை நீர் திட்டத்தில் இருந்து, மின் உற்பத்தி செய்வதற்கான சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது மலம்புழா அணை. இந்த அணையில், நீர் திட்டத்தில் இருந்து மின் உற்பத்தி செய்வதற்கான அமைப்புகள் மாநில மின்வாரிய துறையினர் ஏற்கனவே செய்திருந்தனர்.
இந்நிலையில், அணை நீர் திட்டத்தில் இருந்து, மின் உற்பத்தி செய்வதற்கு முன் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.
மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மின் உற்பத்தி செய்வதற்கு முன்னதாக, சோதனை ஓட்டம் செய்யப்பட்டது. 2.5 மெகாவாட் திறன் கொண்ட திட்டத்திலிருந்து, தினமும், 48 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி செய்ய முடியும். திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், தினமும், ரூ.2.4 லட்சம் மதிப்பிலான மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
தற்போதைய சூழ்நிலையில், தண்ணீரை அதிகபட்சமாக பயன்படுத்தி மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி நீர் பாசன துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். ஒட்டு மொத்தமாக தண்ணீர் ஆற்றுக்கு திறந்து விடுவதற்கு பதிலாக, மின் உற்பத்தியை செயல்படுத்தும் வகையில் திட்டமிட்டு, முறையான அளவில் தண்ணீர் திறக்க வேண்டும் என்பது மின் வாரியத்தின் கோரிக்கை. இதன் வாயிலாக, அணையின் நீர்மட்டம் வேகமாக சரிவதை கட்டுப்படுத்த முடியும்.
மின் உற்பத்திக்கு பின், ஆற்றிலும், இடது கால்வாய் வாயிலாகவும் தண்ணீர் விடவும் முடியும். தற்போது அணையில் இருக்கும் நீர் நேரடியாக ஆற்றுக்கு செல்கிறது. நீர்வரத்து அதிகரித்து அணை திறக்கும் போதும், பாசனத்திற்காக கால்வாயில் தண்ணீர் திறந்து விடும் போதும், மலம்புழா திட்டத்தில் மின் உற்பத்தி சாத்தியம்.
இவ்வாறு, கூறினார்.