/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ரோபோட்டிக் இருதய அறுவை சிகிச்சையில் துல்லியம்'
/
'ரோபோட்டிக் இருதய அறுவை சிகிச்சையில் துல்லியம்'
ADDED : மார் 25, 2024 12:47 AM

கோவை:''ரோபோட்டிக் இருதய அறுவை சிகிச்சை வாயிலாக, துல்லியமான முடிவுகளை பெறலாம்,'' என, கே.ஜி.மருத்துவமனை நுண்துளை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அருண்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
இருதய வால்வுகளில் அடைப்பு என்பது, இன்று இளம் வயதினருக்கும் ஏற்படுகிறது. இதனால், பைபாஸ் அறுவை சிகிச்சை, ஸ்டென்ட் பொருத்துதல் மேற்கொள்ளப்படுகிறது.
கே.ஜி.மருத்துவமனையில், முன்னர் பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு, ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. 2018ம் ஆண்டு முதல், 4 செ.மீ., அளவுக்கு நுண்துளை இட்டு, அதன் வழியாக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விலா எலும்புகளுக்கு இடையே சிறுதுளை இட்டு, அதன் வழியாக கருவிகளை செலுத்தி, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
வலியில்லாமை, ரத்தக்கசிவு குறைவு, விரைந்து இயல்பு நிலைக்கு திரும்புதல், தழும்பு இல்லாதது இந்த அறுவை சிகிச்சையின் சிறப்பு அம்சங்கள். தற்போது இதில், ரோபோட்டிக் முறை அறுவை சிகிச்சை வந்து விட்டது.
நுண் துளை அறுவை சிகிச்சையில், அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு அதிக சிரமங்கள் இருந்தன. ரோபோட்டிக் சிகிச்சையில் இதற்கு தீர்வு கிடைத்துள்ளது.
நுண் துளை அறுவை சிகிச்சையில், கருவிகள் எட்ட முடியாத இடத்துக்கும் ரோபோட்டிக் கருவிகள் செல்லும். உடல் பாகங்களை மிகத்துல்லியமாக பெரிதுபடுத்தி காட்ட, ரோபோட்டிக் கருவிகள் பயன்படுகின்றன.
குறைந்தபட்சம் 10 முதல், அதிகபட்சம், 40 மடங்கு பெரிதுபடுத்திக் காட்டுகிறது. இதன் வாயிலாக துல்லியமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

